சென்னையில் 77 நிவாரண மையங்கள்: எஸ்.பி. வேலுமணி

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகராட்சி சார்பில் 15 மண்டலங்களில் 77 நிவாரண மையங்களும், 2 பொது சமையலறைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக
சென்னையில் 77 நிவாரண மையங்கள்: எஸ்.பி. வேலுமணி

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகராட்சி சார்பில் 15 மண்டலங்களில் 77 நிவாரண மையங்களும், 2 பொது சமையலறைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
 பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ரிப்பன் மாளிகையில் ஆணையர் கோ.பிரகாஷ் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையடுத்து, சீர்மிகு நகரத் திட்டத்தின்கீழ் மாநகராட்சியின் பல்வேறு துறைகளின் விவரங்களைச் சேகரித்து, ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடக்கி வைத்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறியது: வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கைக்காக ரிப்பன் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையை நிவர் புயல் பாதிப்பு தொடர்பாக 044 25384530, 25384540 என்ற தொலைபேசி எண்களிலும், 1913 என்ற இலவச எண்ணிலும் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். தாழ்வான பகுதிகளில் வாழும் மக்களைக் காப்பாற்றும் பொருட்டு 109 இடங்களில் படகுகள், நடமாடும் மருத்துவக் குழுக்கள், அனைத்து அம்மா உணவகங்கள், 50 இடங்களில் அம்மா குடிநீர் மையங்கள் தயார் நிலையில் உள்ளன. 4 பொது சமையல் அறைகளில் 1,500 பேருக்கு சமையல் செய்யும் அளவுக்கு தேவையான பொருள்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
 நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக மண்டலத்துக்கு 5 நிவாரண மையங்கள் என 15 மண்டலங்களில் 77 நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், 2 பொது சமையலறைகள் மூலம் உணவு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதைக் கண்காணிக்க மாநகராட்சி வருவாய்த் துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 சாலையில் விழும் மரங்கள் மற்றும் மரக்கிளைகளை அகற்றுவதற்காக வாகனத்தில் பொருத்தப்பட்ட 2 ரம்பங்கள், டீசல், பெட்ரோலினால் இயங்கும் 360 ரம்பங்கள், மின்சாரத்தில் இயங்கும் 11ரம்பங்கள், உயர் கோபுர விளக்குகள் ஆகியவை மண்டல அலுவலகங்களில் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற 570 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளன.
 இதுதவிர மின்சார கம்பம், அறுந்து தொங்கும் மின்கம்பிகள் மற்றும் மின் இணைப்பு பெட்டிகள் சேதமடையாமல் இருப்பதை கண்காணிக்க குழு, 52 இடங்களில் களத்தில் நின்று பணிபுரிய தேசிய பேரிடர் மீட்பு, மாநகர பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளன என்றார்.
 கூட்டத்தில் ஆணையர் கோ.பிரகாஷ், துணை ஆணையர் ஜெ.மேகநாத ரெட்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com