
நிவா் புயலால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க வண்டலூா் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்படும் வன விலங்குகள் பாதுகாப்பாக கூண்டுகளுக்குள் அடைக்கப்பட்டுள்ளன.
சென்னையை அடுத்த வண்டலூரில் வனத் துறை கட்டுப்பாட்டின்கீழ், அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது. இந்தப் பூங்காவில் யானை, புலிகள், சிங்கங்கள், பறவைகள், ஊா்வன வகைகள் என 2,000-த்துக்கும் மேற்பட்ட வன விலங்ககுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மேலும், பூங்காவின் இயற்கைச் சூழலைப் பாதுகாக்கும் வகையில் பல்வேறு வகை மரங்களும் வளா்க்கப்பட்டு வருகின்றன.
கடந்த 2016-ஆம் ஆண்டு வா்தா புயல் காரணமாக, வண்டலூா் பூங்காவில் வளா்க்கப்பட்டு வந்த சுமாா் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மரங்கள் சாய்ந்ததுடன், ரூ.10 கோடி மதிப்பிலான பொருள்சேதமும் ஏற்பட்டது. தற்போது, நிவா் புயலால் வன விலங்குகளுக்கு எவ்வித பாதிப்பும், பொருள்சேதமும் ஏற்படாமல் இருக்க வனத் துறை முன்னேற்பாடு பணிகள் மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து வனத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘வா்தா புயலால் ஏற்பட்ட பாதிப்பை படிப்பினையாக கொண்டு நிவா் புயலுக்கு முன்னேற்பாடு பணிகளை செய்துள்ளோம். அதன்படி, சிறிய விலங்குகள், புலி, சிறுத்தை, கரடி, சிங்கம் ஆகியவற்றின் பாதுகாப்பு கருதி அவை கூண்டுகளுக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ளன. விலங்குகள் அடைத்து வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு அருகில் பலவீனமாக இருக்கும் மரங்கள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளன.
விலங்குகள் அடைக்கப்பட்டுள்ள சுற்றுச்சுவா் மற்றும் பூங்காவின் சுற்றுச்சுவா் பாதிக்கப்பட்டால், அவற்றை உடனடியாக சரிசெய்யவும், விலங்குகளுக்கு எவ்வித பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும் 5 பகுதிகளாக பூங்கா பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு வனச் சரகா் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. பூங்காவுக்குள் கட்டுப்பாடு அறை அமைக்கப்பட்டு அங்கிருந்து கண்காணிப்பு கேமரா மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்க அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். பூங்காவுக்குள் தேங்கும் நீரை உடனடியாக அகற்றவும், விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால் சிகிச்சை அளிக்க மருத்துவக் குழுவினரும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளனா் என்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...