ஆவடி பகுதியில் போர்க்கால அடிப்படையில் மழைநீர் வெளியேற்ற நடவடிக்கை: அமைச்சர் க.பாண்டியராஜன்

ஆவடி பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை போர்க்கால அடிப்படையில் அகற்றும் பணி மும்முரமாக நடைபெற்று வருவதாக தமிழ் மொழி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்தார்.
நிவர் புயலால் ஆவடி பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீர் பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட தமிழ் மொழி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன்.
நிவர் புயலால் ஆவடி பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீர் பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட தமிழ் மொழி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன்.

திருவள்ளூர்: ஆவடி பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை போர்க்கால அடிப்படையில் அகற்றும் பணி மும்முரமாக நடைபெற்று வருவதாக தமிழ் மொழி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி பகுதியில் நிவர் புயலால் தொடர்ந்து மழை பெய்து வருவதை தொடர்ந்து கால்வாய்களில் நீர் வரத்து ஏற்பட்டு ஏரிகளும் நிரம்பி வருகிறது. இதைத் தொடர்ந்து ஆவடி பகுதிகள் மற்றும் ஆவடி-பூந்தமல்லி நெடுஞ்சாலை, பருத்திப்பட்டு ஏரி நீர் சுத்திகரிப்பு நிலையம், திருநின்றவூர் பேரூராட்சி, ஸ்ரீராம் நகர், திருநின்றவூர் பேரூராட்சி ஈசா பெரிய ஏரியில் தமிழ் மொழி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன், நகராட்சி நிர்வாகங்களின் ஆணையாளர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் க.பாஸ்கரன், ஆட்சியர் பா.பொன்னையா ஆகியோர் வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, மழை நீர் சூழ்ந்துள்ள அப்பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மழை நீரை வெளியேற்றவும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் க.பாண்டியராஜன் கூறுகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் நிவர் புயலை எதிர்கொள்ள அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் போர் கால அடிப்படையில் மேற்கொள்ள ஏற்பாடு செய்துள்ளது. அதன் அடிப்படையில் நிவாரண பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஆவடி பகுதிகளில் 42 இடங்களை மிக அதிக பாதிப்பு, மிக பாதிப்பு, மிதமான பாதிப்பு மற்றும் குறைந்த பாதிப்பு என 4 பகுதிகளாக பிரிக்கப்பட்டு, அப்பகுதிகளில் ஓராண்டு முன்பாகவே கண்டறிந்து முன்னெச்சரிகை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இப்பகுதிகளில் மட்டும் இயற்கை பேரிடர் மற்றும் உள்ளாட்சிதுறைகளின் மூலம் ரூ.110 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அதிக பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் சீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால், தற்போது அப்பகுதிகளில் குறைவான பாதிப்புகளே ஏற்பட்டு உள்ளது.

அதேபோல், மிகவும் பாதிப்புக்குள்ளாகும் பருத்திப்பட்டு மற்றும் திருநின்றவூர் ஆகிய பகுதிகளில் தற்போது மிதமான பாதிப்புகளே ஏற்பட்டுள்ளது. 

ஆவடியில் அனைத்து பகுதிகளிலும் ரூ.27 கோடிக்கு மழைநீர் கால்வாய்கள், திருவேற்காடு பகுதியில் ரூ.19 கோடிக்கு மழைநீர் கால்வாய், திருநின்றவூர் பகுதியில் ரூ.1.5 கோடிக்கு மழைநீர் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற காரணங்களால் மக்களுக்கு இடையூறு ஏற்படும் விதமாக இருந்த சாலைகள் தற்போது எவ்வித சேதமும்மின்றி நல்ல நிலையில் உள்ளது.

அதேபோல், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட பருத்திப்பட்டு ஏரி ரூ.32 கோடியில் 20 அடி ஆழமுள்ள நீர் சேமிப்பு ஏரியாக உள்ளது. அதற்கு முன்பு கழிவு நீர் சேமிப்பாக இருந்த இடம், நீர் சேமிப்பு பகுதியாக மாற்றப்பட்டுள்ளது. மேலும், இங்கிருந்து ரூ.4 கோடி மதிப்பீட்டில் அயப்பாக்கம் ஏரிக்கு மழைநீர் கால்வாய் அமைத்து உபரி நீர் வெளியேற்றவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆவடியில் உள்ள 8 ஏரிகள் எது நிரம்பினாலும் மற்றொரு ஏரிக்கு நீர் செல்லும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து பூண்டி ஊராட்சி ஒன்றியம், பூண்டி சத்தியமூர்த்தி நீர்தேக்கத்தில் நீர் இருப்பு, நீர் வரத்து, நீர் வெளியேற்றம் குறித்து ஆய்வு செய்தனர். இந்த மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் உள்ளவர்களை மீட்டு தங்க வைப்பதற்காக 36 மழைக்கால தங்கும் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. 

இதில், தற்போதைய நிலையில் 1309 பேர் தங்கியுள்ளது. இதில் திருவள்ளூர் மற்றும் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், வெண்மணம்பூதூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் தற்காலிக தங்கும் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களிடம் குறைகளையும் கேட்டறிந்தனர்.

இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் வெ.முத்துசாமி, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) ஆ.வில்லியம் ஏசுதாஸ், பொதுபணித்துறை (கொசஸ்தலையாறு) உதவி செயற்பொறியாளர் கார்திக்கேயன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com