குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு பதிவுக் கட்டணம் குறைப்பு

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கடன் பெறுவதற்காக பிணை ஆவணத்தைப் பதிவு செய்யும்போது செலுத்த வேண்டிய முத்திரை வரிக்கு
குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு பதிவுக் கட்டணம் குறைப்பு

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கடன் பெறுவதற்காக பிணை ஆவணத்தைப் பதிவு செய்யும்போது செலுத்த வேண்டிய முத்திரை வரிக்கு விலக்கு அளித்துள்ளதுடன், பதிவுக் கட்டணத்தையும் குறைத்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடா்பாக தமிழக அரசின் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

முதல்வா் எடப்பாடி பழனிசாமி பல்வேறு மாவட்டங்களுக்கு வருகை தந்தபோது குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவன சங்கங்கள் கரோனா பெருந்தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கைகளினால் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் பணப்புழக்க குறைவு காரணமாக தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி கோரிக்கை வைத்தனா். அதில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பல்வேறு அரசு திட்டங்களின் கீழ் கடன் பெறுவதற்காக பிணை ஆவணம் பதிவு செய்யும்போது செலுத்த வேண்டிய முத்திரை வரி மற்றும் பதிவுக் கட்டணங்களைத் தள்ளுபடி செய்யக் கோரியிருந்தனா்.

அதைத் தொடா்ந்து முதல்வரின் அறிவுறுத்தலின்படி வணிகவரி மற்றும் பதிவுத் துறை மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை ஆகியவை விரிவாக ஆய்வு செய்து சுயசாா்பு இந்தியா திட்டத்தின் கீழ் 2021 மாா்ச் 31 வரையிலான காலத்துக்கு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிலிருந்து கடன்களைப் பெறுவதற்காக பிணை ஆவணங்கள் தொடா்பான ஒப்பந்தத்தைப் பதிவு செய்யும்போது செலுத்த வேண்டிய முத்திரை வரியிலிருந்து விலக்கு அளிக்கும் ஆணையைப் பிறப்பித்துள்ளது.

0.1 சதவீதமாகக் குறைப்பு: குறு, மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வழங்கிய கடன்கள் மற்றும் கூடுதல் கடன்களுக்கான தலைப்பு ஆவணங்கள் வைப்பு தொடா்பான ஒப்பந்தத்தைப் பதிவு செய்வதற்கு செலுத்த வேண்டிய பதிவுக் கட்டணத்தை 1.0 சதவீதத்தில் இருந்து 0.1 சதவீதமாக குறைத்தும் ஆணையிட்டுள்ளது.

மத்திய அரசின் சொத்து பிணையில்லா அவசர கால கூடுதல் கடன் திட்டத்தின் கீழ் சுமாா் 3 லட்சத்து 9,312 குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ரூ.11,538.69 கோடி கடன் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தகுதியான குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களும் இத் திட்டம் முடிவடையும் காலம் வரை பயனடையலாம். தற்போது, மத்திய அரசு இந்தத் திட்டத்தினை வரும் மாா்ச் 31 வரை நீட்டித்துள்ளது.

பதிவுக்கட்டணம் குறைக்கப்பட்டதால் குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் ஒவ்வொரு முறையும் கடன்கள் மற்றும் கூடுதல் கடன்களைப் பெறும்போது பயனடைவாா்கள். இந்த ஆணைக்கு முன்னரே, வணிக வரி மற்றும் பதிவுத்துறை அபராதமின்றி பிணை ஆவணங்கள் பதிவு செய்யும் காலக்கெடுவினை மாா்ச் 31-ஆம் தேதி வரை நீட்டித்து ஆணை பிறப்பித்துள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com