முழுக் கொள்ளளவை எட்டும் பூண்டி ஏரி: 6 மதகுகள் வழியாக தலா 1000 கன அடி நீர் திறப்பு

பூண்டி ஏரியில் நீர் வரத்து காரணமாக ஏரி விறுவிறுவென நிரம்பி வருவதால், பாதுகாப்பு கருதி 6 மதகுகள் வழியாக கூடுதலாக தலா 1000 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
முழுக் கொள்ளளவை எட்டும் பூண்டி ஏரி: 6 மதகுகள் வழியாக தலா 1000 கன அடி நீர் திறப்பு
முழுக் கொள்ளளவை எட்டும் பூண்டி ஏரி: 6 மதகுகள் வழியாக தலா 1000 கன அடி நீர் திறப்பு

திருவள்ளூர்: பூண்டி ஏரியில் நீர் வரத்து காரணமாக ஏரி விறுவிறுவென நிரம்பி வருவதால், பாதுகாப்பு கருதி 6 மதகுகள் வழியாக கூடுதலாக தலா 1000 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது திருவள்ளூர் அருகே உள்ள பூண்டி ஏரி. இது 35 அடி கொண்டதாகும். இதில் 3,231 மில்லியன் கன அடி நீரைத் தேக்கி வைக்க முடியும். பூண்டி ஏரிக்கு கண்டலேறு அணையிலிருந்தும், வரத்துக் கால்வாய் மூலமும் தற்போது வினாடிக்கு 8 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 

இந்த நிலையில் சனிக்கிழமை காலை நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 33.72 அடியை எட்டிய நிலையில் 2,732 மில்லியன் கன அடியாக நீர் இருப்பு உயர்ந்துள்ளது. அதேபோல் புழல் ஏரியில் நீர்வரத்து 2,792 மில்லியன் கன அடியாக உயர்ந்துள்ளது.

எனவே ஏரியின் பாதுகாப்பு கருதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு பொதுப்பணித் துறையால் 4 மதகுகள் வழியாக தலா 250 கன அடிநீர் திறக்கப்பட்டது. இந்த நிலையில் நீர் வரத்து தொடர்ந்து வந்து கொண்டே இருப்பதால் சனிக்கிழமையும் கூடுதலாக 2 மதகுகள் என 6 மதகுகள் வழியாக தலா 1000 கன அடிவீதம் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடலில் கலக்கும் உபரி நீர்...: பூண்டி ஏரியில் இருந்து திறந்துவிடப்படும் உபரி நீர் மெய்யூர், ஒதப்பை, எறையூர், தாமரைப்பாக்கம், குசஸ்தலை ஆற்றில் கலந்து காரனோடை ஜனப்பசத்திரம், எடையார் சாவடி வழியாக எண்ணூர் கடலில் கலக்கிறது. இந்த நீர் திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, பொன்னேரி உள்ளிட்ட வட்டங்கள் வழியாக 50 கிராமங்களைக் கடந்து செல்கிறது. 

இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதால் கரையோர தாழ்வான பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. எனவே கொசஸ்தலை ஆற்று வழித்தடத்தில் செல்ஃபி எடுக்கவோ, துணி துவைக்கவோ, குளிக்கவோ கூடாது எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.  

இதுவரையில் பூண்டி ஏரி 5 முறை திறப்பு: சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருப்பது பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம். கடந்த 1940 முதல் 1944ஆம் ஆண்டு வரை கட்டப்பட்டது. இந்த நீர்த்தேக்கம் ஆனது 8458 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. 35 அடி உயரமும் 3231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த நீர்த்தேக்கத்தில் தற்போதைய நிலவரப்படி 2742 மில்லியன் கன அடி கொள்ளளவு 34 அடியை எட்டி வருகிறது. 

இதனால் ஏரியின் பாதுகாப்பு கருதி உபரி நீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் கடந்த 2015 இல் புயல் காரணமாக ஏரி நிரம்பியதால் உபரி நீர் வெளியேற்றப்பட்டது. தற்போது ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து வரும் நீர், அம்மம் பள்ளி அணையில் இருந்து வரும் நீர், ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஏரி பகுதியில் இருந்து திறந்துவிடப்படும் உபரிநீர் நந்தி ஆற்றில் கலந்து பூண்டி ஏரியில் கலக்கும் நீர் மற்றும் மழை நீர் ஆகியவைகளால் 8 ஆயிரம் கன அடி நீர் நொடிக்கு வந்து கொண்டுள்ளது. 

இதனால் பூண்டி நீர்த்தேக்கத்தின் நீர் இருப்பு கணிசமாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நீர்த்தேக்கம் அமைக்கப்பட்ட நாளிலிருந்து இதுவரை 4 முறை மட்டுமே முழு கொள்ளளவை எட்டிய நிலையில் உபரிநீர் வெளியேற்றப்பட்டுள்ளது. இதில் 2015-இல் மட்டுமே ஒரு லட்சம் கனஅடி வீதம் நீர் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது 5-ஆவது முறையாக முதல் கட்டமாக 1000 கன அடிவீதம் திறக்கப்பட்டு, சனிக்கிழமை 6 மதகுகள் வழியாக தலா 1000 அடியாக வெளியேற்றப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com