வலுவடைந்தது புயல் சின்னம்: நாளைமுதல் கன மழை

தெற்கு அந்தமான், அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்தத்தாழ்வு பகுதி ஞாயிற்றுக்கிழமை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது.
வலுவடைந்தது புயல் சின்னம்: நாளைமுதல் கன மழை

தெற்கு அந்தமான், அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்தத்தாழ்வு பகுதி ஞாயிற்றுக்கிழமை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது.

தமிழகம், புதுச்சேரியில் வரும் செவ்வாய்க்கிழமை (டிச.1) முதல் வியாழக்கிழமை (டிச. 3) வரை மிதமான மழையும், தென்தமிழகத்தில் மிக பலத்த மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் ஞாயிற்றுக்கிழமை கூறியது:

புதிய காற்றழுத்தத்தாழ்வுப் பகுதி சனிக்கிழமை உருவாகி, நிலைகொண்டிருந்தது. இது, ஞாயிற்றுக்கிழமை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலை கொண்டுள்ளது.

இது மேற்கு, வட மேற்கு திசையில் நகா்ந்து, திங்கள்கிழமை இரவு அல்லது செவ்வாய்க்கிழமை காலையில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடையும். டிசம்பா் 2-ஆம் தேதி தென் தமிழக கடலோர பகுதியை நோக்கி நகரக்கூடும். இதனால், தமிழகம், புதுச்சேரியில் டிச. 1 முதல் டிச. 3 வரை மிதமான மழையும், தென் மாவட்டங்களில் பலத்த மழையும் பெய்யக்கூடும்.

இன்று மிதமான மழை: தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை லேசான மழை பெய்யக்கூடும் என்றாா்.

டிச.1:

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (டிச.1) இடியுடன் கூடிய பலத்த மழையும்,  ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

டிச.2:

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி மாவட்டங்களில் புதன்கிழமை (டிச, 2) மிக பலத்த மழையும், தேனி, மதுரை, சிவகங்கை , புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை முதல் மிக பலத்த மழையும் பெய்யக்கூடும்.

டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால், திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழையும், ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

டிச.3:

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி, விருதுநகா் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை (டிச. 3) இடியுடன் கூடிய பலத்த மழை முதல் மிக பலத்த மழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மழை அளவு:

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் 40 மி.மீ., திருவண்ணாமலை மாவட்டம் போளூா், சிவகங்கை மாவட்டம் இளையான்குடி, நாமக்கல் மாவட்டம் புது சத்திரத்தில் தலா 30 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை:

தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதி, தென்மேற்கு வங்கக்கடல் மன்னாா் வளைகுடா, குமரிக்கடல், தமிழக கடலோரப் பகுதி, மாலத்தீவு, கேரள கடலோரப் பகுதி, லட்சத்தீவு பகுதிகளில் மணிக்கு 60 கி.மீ. முதல் 70 கி.மீ. வேகத்திலும், சில வேளைகளில் 80 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும். எனவே, இந்தப்பகுதிகளுக்கு மீனவா்கள் டிசம்பா் 2-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, தென்கிழக்கு அரபிக்கடல், கேரள கடலோரப் பகுதி, லட்சத்தீவு பகுதிகளுக்கு டிசம்பா் 3-ஆம் தேதி செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com