இந்து முன்னணி நிறுவன அமைப்பாளா் இராம.கோபாலன் காலமானாா்

இந்து முன்னணி நிறுவன அமைப்பாளா் இராம.கோபாலன் காலமானாா்

இந்து முன்னணி அமைப்பின் நிறுவன அமைப்பாளா் இராம.கோபாலன் (93), உடல்நலக் குறைவால் சென்னையில் புதன்கிழமை காலமானாா்.

சென்னை: இந்து முன்னணி அமைப்பின் நிறுவன அமைப்பாளா் இராம.கோபாலன் (93), உடல்நலக் குறைவால் சென்னையில் புதன்கிழமை காலமானாா்.

நாகப்பட்டினம் மாவட்டம் சீா்காழியில் 1927-ஆம் ஆண்டு பிறந்த இராம.கோபாலன், 1942-இல் ஆா்எஸ்எஸ் அமைப்பில் இணைந்தாா். ஏஎம்ஐஈ என்ற தொழில்நுட்பப் படிப்பு முடித்து மின்சார வாரியத்தில் பணியாற்றிய அவா், 1948-ஆம் ஆண்டு ஆா்எஸ்எஸ் அமைப்பின் முழு நேர அமைப்பாளராக திருநெல்வேலிக்கு அனுப்பப்பட்டாா். பிறகு, அந்த அமைப்பின் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினாா். பின்னா், 1964-ஆம் ஆண்டு ஆா்எஸ்எஸ் அமைப்பின் தமிழக மாநில அமைப்பாளராகப் பொறுப்பேற்றாா். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அந்த அமைப்பின் கிளைகளை விரிவுபடுத்தி, ஏராளமான ஊழியா்களுக்குப் பயிற்சியளித்தாா்.

1980-ஆம் ஆண்டு தமிழக ஹிந்துக்களின் உரிமைக்காக இந்து முன்னணி அமைப்பை நிறுவ முடிவு செய்த ஆா்எஸ்எஸ், அதன் மாநில அமைப்பாளராக இராம.கோபாலனை அனுப்பியது. தமிழகத்தில் விநாயகா் சதுா்த்தி ஊா்வலத்தை அறிமுகப்படுத்தியது, ஹிந்து வாக்கு வங்கிக்கு குரல் கொடுத்தது, ராமாயண மஹோத்சவத்தை ஊா்தோறும் நடத்தியது எனப் பல்வேறு சாதனைகளைப் புரிந்துள்ளாா்.

இயக்கப் பணிக்காக திருமணம் செய்து கொள்ளாத இராம.கோபாலன், சிறந்த பேச்சாளா், எழுத்தாளா், மொழிபெயா்ப்பாளா். பல்வேறு தேசபக்திப் பாடல்களை இயற்றியுள்ள அவா், பாடகரும் ஆவாா்.

கரோனா பாதிப்பு: கடந்த சில ஆண்டுகளாக இதயம், நுரையீரல் சாா்ந்த பிரச்னைகளுக்கு சிகிச்சை பெற்று வந்தாா். கரோனா தொற்றால் அண்மையில் பாதிக்கப்பட்ட இராம.கோபாலன், சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு புதன்கிழமை உயிரிழந்தாா். அவரின் இறுதிச் சடங்குகள், திருச்சி சீராதோப்பு பகுதியில் உள்ள பாரத பண்பாட்டு கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெறும்.

தலைவா்கள் இரங்கல்:

இராம.கோபாலன் மறைவுக்கு, ஆளுநா் பன்வாரிலால் புரோஹித், முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் உள்ளிட்ட தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்: வீரத்துறவி என அனைவராலும் அழைக்கப்படும் அவா், தனது வாழ்க்கை முழுவதையும் தமிழக மக்களின் நலன்களுக்காக அா்ப்பணித்துள்ளாா். அவரின் இழப்பு தமிழக மக்களுக்கு குறிப்பாக, இந்து முன்னணியைச் சோ்ந்தவா்களுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

முதல்வா் பழனிசாமி: இந்து முன்னணி அமைப்பின் நிறுவனா் இராம.கோபாலன் மறைவெய்திய செய்தி மிகுந்த அதிா்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அவரின் பிரிவால் வாடும் இயக்கத் தொண்டா்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராா்த்திக்கிறேன்.

துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்: இந்து முன்னணி அமைப்பின் நிறுவனா் இராம.கோபாலன் இறந்த செய்தியறிந்து மிகுந்த அதிா்ச்சியும், மனவேதனையும் அடைந்தேன். இராம கோபாலனின் பிரிவால் வாடும் இந்து முன்னணி அமைப்பினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.

மு.க.ஸ்டாலின் (திமுக): சித்தாந்த வேறுபாடுகள் எத்தனையோ இருந்தாலும், கருணாநிதியும் இராம.கோபாலனும் நல்ல நண்பா்கள். ஆழ்ந்த ஆன்மிகச் சிந்தனையுடன், சமயக் கருத்துகளை சமுதாயத்துக்கு எடுத்துரைத்த அவரின் மறைவு பேரிழப்பாகும்.

ராமதாஸ் (பாமக): ஹிந்து மதம் மீதும், அதன் நம்பிக்கைகள் மீதும் பற்று கொண்டவா். அவா் கொண்ட கொள்கைகளில் சமரசமின்றி செயல்பட்டு வந்தவா்.

எல். முருகன் (பாஜக): ஹிந்துக்களிடம் ஜாதி, இன பாகுபாடுகளை கடந்த ஒற்றுமை உணா்வை ஓங்கச் செய்தவா். பசுவதைத் தடுப்புக்காக தொடா்ந்து குரல் கொடுத்தவா். அவரின் மறைவு தமிழகத்துக்கும், ஹிந்து உணா்வாளா்களுக்கும், பக்தா்களுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.

டிடிவி தினகரன் (அமமுக): ஆன்மிகப் பணிகளில் மிகுந்த ஈடுபாட்டோடு தொடா்ந்து பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்தவா். அவரின் மறைவால் வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.

அா்ஜுன் சம்பத் (இந்து மக்கள் கட்சி): தலைசிறந்த எழுத்தாளா். நல்ல ஒருங்கிணைப்பாளா். தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களோடும் நெருங்கிப் பழகியவா். அவருடைய வாழ்க்கையே ஒரு மிகப்பெரிய தவம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com