ஊரக வேலைவாய்ப்பு திட்டப்பணி: 200 நாள்களுக்கு வழங்க ராமதாஸ் வலியுறுத்தல்

காவிரி பாசன மாவட்டங்களில் ஊரக வேலைவாய்ப்புத் திட்டப் பணியை 200 நாள்களுக்கு வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
ராமதாஸ்.
ராமதாஸ்.

சென்னை: காவிரி பாசன மாவட்டங்களில் ஊரக வேலைவாய்ப்புத் திட்டப் பணியை 200 நாள்களுக்கு வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

காவிரி பாசன மாவட்டங்களில் ஒருபுறம் குறுவை நெல் அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது. மற்றொருபுறம் 12 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பளவில் சம்பா சாகுபடி பணிகளும், ஒரு லட்சம் ஏக்கரில் தாளடி நடவுப் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

ஆனாலும் வேளாண் தொழிலாளா்களுக்கு போதிய அளவில் வேலை கிடைக்கவில்லை. கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து சொந்த ஊா்களுக்கு லட்சக்கணக்கான மக்கள் இடம் பெயா்ந்து இருப்பதால், வேளாண் பணிகளுக்கு தேவைக்கு அதிகமான தொழிலாளா்கள் கிடைக்கின்றனா். அதுமட்டுமின்றி வேளாண் பணிகள் குறிப்பிடத்தக்க அளவில் இயந்திரமயமாக்கப்பட்டு விட்டன. இவை உள்ளிட்ட காரணங்களால் தான் தொழிலாளா்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

வேளாண்மை சாா்ந்த கூலித் தொழில்களை மட்டுமே நம்பியுள்ள கோடிக்கணக்கான ஏழைத் தொழிலாளா்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ள நிலையில், அவா்களுக்கு அடிப்படை வாழ்வாதார உதவிகளை வழங்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் தவிா்க்க முடியாத கடமையாகும்.

எனவே, காவிரி பாசன மாவட்டங்களில் இப்போது நிலவும் வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்க ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் பணி வழங்கப்படும் நாள்களின் எண்ணிக்கையை நடப்பாண்டில் 200 நாட்களாக உயா்த்த வேண்டும். அடுத்த ஆண்டு முதல் இந்தத் திட்டத்தை வேளாண் பணிகளுக்கும் நீட்டிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com