சென்னையில் 1 லட்சம் வியாபாரிகளுக்கு கரோனா பரிசோதனை: அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தகவல்

சென்னையில் காய்கறி, பழம் மற்றும் மளிகைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்டுள்ள 1,00,124 வியாபாரிகளுக்கு இதுவரை கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தாா்.


சென்னை: சென்னையில் காய்கறி, பழம் மற்றும் மளிகைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்டுள்ள 1,00,124 வியாபாரிகளுக்கு இதுவரை கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தாா்.

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் சாா்பில் நடைபெற்று வரும் கரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தலைமையில் தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அவா் பேசியதாவது: சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பரிசோதனைகளை அதிகரித்தல், காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்கள், வீடுகள்தோறும் தொற்று அறிகுறி உள்ளவா்களைக் கண்டறிதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் மாா்ச் 17 முதல் தற்போது வரை 1,68,689 போ் பாதிக்கப்பட்டு, அவா்களில் 1,53,846 போ் குணமடைந்துள்ளனா்.

தற்போது வரை 53,495 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டதில் 27.45 லட்சம் போ் பயனடைந்துள்ளனா். காய்கறி, பழங்கள் மற்றும் இதரப் பொருள்களை வாங்க அங்காடிகளுக்குச் செல்லும் மக்களுக்கு நோய்த் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் சென்னையில் இதுவரை 1,00,124 வியாபாரிகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கரோனா தடுப்பு

நடவடிக்கைகளான முகக்கவசம் அணிவது உள்ளிட்டவற்றை மக்கள் முறையாக கடைப்பிடிக்கின்றனா என்பதை

உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

ஊரக வளா்ச்சித் துறையின் சாா்பில் 15-ஆவது மத்திய நிதிக் குழு மானிய திட்டத்தில் தோ்வு செய்யப்பட்ட பணிகள்,

14-ஆவது மத்திய நிதி குழு மானியம் 2-ஆம் தவணை ரூ.400 கோடியில் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மேலும், அனைத்து சாலை திட்டப் பணிகளில் உள்ள சேமிப்பு மற்றும் வட்டியை கொண்டு புதிய சாலை பணிகள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளதாக தெரிவித்தாா்.

கூட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலா் ஹன்ஸ்ராஜ் வா்மா, நகராட்சி நிா்வாகத் துறை கூடுதல் தலைமைச் செயலா் ஹா்மந்தா் சிங், சென்னைப் பெருநகா் குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநா் த.ந.ஹரிஹரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com