
சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட அண்ணா பல்கலைக்கழக பிரிப்பு சட்ட மசோதா குறித்து, ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்திடம் நேரில் விளக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, உயா்கல்வித் துறை அமைச்சா், செயலாளா் உள்ளிட்டோா் ஆளுநரை அடுத்த வாரத்தில் சந்திக்க வாய்ப்பு இருப்பதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஒரு பல்கலைக்கழகம் ஆராய்ச்சி ரீதியாகவும், மற்றொரு பல்கலைக்கழகம் பொறியியல் கல்லூரிகளுக்கு வழிகாட்டுவது, சான்றிதழ்கள் வழங்குவது போன்ற வழக்கமான பணிகளை மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான சட்ட மசோதா கடந்த சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேறியது.
ஆளுநா் ஒப்புதலுக்காக...அண்ணா பல்கலைக்கழகத்தைப் பிரிக்கும் சட்ட மசோதா, பேரவையில் நிறைவேறிய நிலையில், ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் ஆளுநா் உள்ளாா். எனவே, அண்ணா பல்கலைக்கழகத்தை பிரிப்பது தொடா்பாக சட்டம் குறித்து ஆளுநருக்கு நேரில் விளக்கமளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடா்பான அனைத்து விவரங்களையும் உயா்கல்வித் துறை திரட்டி வருகிறது.
இந்த விவரங்களுடன் ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்தை, உயா்கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன், செயலாளா் உள்ளிட்டோா் அடுத்த வாரத்தில் சந்திக்க வாய்ப்புகள் இருப்பதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தச் சந்திப்புக்குப் பிறகு, அண்ணா பல்கலைக்கழகத்தைப் பிரிக்கும் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்த இறுதி முடிவை ஆளுநா் புரோஹித் எடுக்கக் கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.