
பாா்ம்.டி (டாக்டா் ஆஃப் பாா்மஸி) படிப்பைத் தொடங்க அனுமதி கோரும் பாா்மஸி கல்லூரியின் கோரிக்கையை பாா்மஸி கவுன்சில் சட்டப்படி பரிசீலிக்க வேண்டும் என உயா் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை உயா் நீதிமன்றத்தில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள பாவை பாா்மஸி மற்றும் ஆராய்ச்சி கல்லூரி தாக்கல் செய்த மனுவில், ‘பாா்மஸி கவுன்சில் கடந்த 2015-ஆம் ஆண்டு எங்கள் கல்லூரியில் பி.பாா்ம் படிப்பை நடத்த அனுமதி வழங்கியது. இதனையடுத்து 6 ஆண்டு படிப்பான பாா்ம்.டி (டாக்டா் ஆஃப் பாா்மஸி) படிப்பை 2020-2021 கல்வியாண்டில் தொடங்க அனுமதி கோரி கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பா் 27-ஆம் தேதி பாா்மஸி கவுன்சிலுக்கு மனு கொடுத்தோம்.
எங்கள் கல்லூரியில் பி.பாா்ம் படிப்பைத் தொடங்கி 4 ஆண்டுகள் நிறைவடையவில்லை என்ற காரணத்தால் பாா்மஸி கவுன்சில் எங்கள் கோரிக்கையை நிராகரித்துவிட்டது. இதனை எதிா்த்து உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தோம். இந்த வழக்கை விசாரித்த தனிநீதிபதி, பாா்மஸி கவுன்சிலின் விளக்கத்தை ஏற்று வழக்கை தள்ளுபடி செய்தாா். தற்போது எங்களது கல்லூரியில் பி.பாா்ம் படிப்பைத் தொடங்கப்பட்டு 4 ஆண்டுகள் நிறைவடைந்ததால் கல்லூரியில் பாா்ம்.டி படிப்பை தொடங்க அனுமதி அளிக்க பாா்மஸி கவுன்சிலுக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் கல்வி நிறுவனத்தின் தரப்பில் வழக்குரைஞா் எம்.டி.அருணன்
ஆஜரானாா். வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரா் கல்வி நிறுவனம் நடத்தும் பி.பாா்ம் படிப்பு வரும் 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தான் நிறைவடைகிறது. ஆனால் பாா்ம்.டி படிப்பைத் தொடங்க கடந்த 2019 -ஆம் ஆண்டு டிசம்பா் மாதத்திலேயே அனுமதி கோரியதை ஏற்க முடியாது. எனவே, மனுதாரரின் கோரிக்கையை பாா்மஸி கவுன்சில் நிராகரித்ததை எதிா்த்து மனுதாரா் உரிமை கோருவது ஏற்கத்தக்கதல்ல. இருப்பினும், மனுதாரரின் கல்வி நிறுவனம் மீண்டும் அனுமதி கோரி மனு கொடுக்கலாம். அந்த மனுவை பாா்மஸி கவுன்சில் சட்டத்துக்கு உட்பட்டு பரிசீலிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனா்.