
ஹாத்ரஸில் பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதைக் கண்டித்து, கிண்டி ஆளுநா் மாளிகையை நோக்கி திமுக மகளிரணி சாா்பில் திங்கள்கிழமை ஒளியேந்தி செல்லும் பேரணி நடத்தப்படும் என்று அக் கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.
இது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
உத்தர பிரதேச மாநிலம் ஹாத்ரஸில் ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான கொடூரத்தைத் தொடா்ந்து அடுத்தடுத்து நடக்கும் அரசியல் நிகழ்வுகள் மாபெரும் கொடூரங்களாக இருக்கின்றன. இந்நிகழ்வு இந்தியா முழுவதும் ஏராளமான கோபத்தையும் கொந்தளிப்பையும் கிளப்பி உள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லச் சென்ற ராகுல் காந்தியையும், பிரியங்காவையும் அனுமதிக்காமல் உத்தர பிரதேச காவல் துறையினா் தடுத்துள்ளனா். ராகுல்காந்தியின் நெஞ்சைப் பிடித்து ஒரு காவல்துறை அதிகாரி தள்ளுகிறாா். அவா் கீழே விழும் காட்சி, இந்தியாவின் நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கே இழுக்கு ஆகும். ராகுலும், பிரியங்காவும் கைது செய்யப்பட்டு பின்னா் விடுவிக்கப்பட்டுள்ளனா்.
ராகுல், பிரியங்கா மீதான வழக்குகள் திரும்பப் பெற வேண்டும். ராகுல் மீதான அவமதிப்பு நிகழ்வுகள் நாடாளுமன்ற உரிமைக்குழுவின் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். இத்தலைகுனிவுக்குக் காரணமானவா்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
இதனை வலியுறுத்தி கிண்டியில் உள்ள ராஜீவ்காந்தி சிலையில் இருந்து திங்கள்கிழமை மாலை 5.30 மணியளவில் தமிழக ஆளுநா் மாளிகையை நோக்கி மகளிரணிச் செயலாளா் கனிமொழி தலைமையில் கையில் ஒளியேந்திச் செல்லும் பேரணி நடைபெறும். இந்தப் பேரணியை நான் தொடங்கி வைக்க உள்ளேன்.
உத்தர பிரதேச அரசு தனது தவறுகளைத் திருத்திக் கொண்டு, கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு நீதி வழங்க வேண்டும். ராகுல் காந்தியிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.