கால்வாய் மீது சாலை அமைப்பதை எதிர்க்கும் வழக்கு : வருவாய்த் துறை செயலருக்கு அபராதம்

விவசாயித்துக்கு நீர் செல்லும் கால்வாய் மீது சாலை அமைப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் பதிலளிக்க தொடர்ந்து கால அவகாசம் கோரப்பட்டதால் தமிழக அரசின் வருவாய்த்துறை செயலாளர் உள்ளிட்டோருக்கு ரூ. 2 ஆயிரம் அ
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்


சென்னை: விவசாயித்துக்கு நீர் செல்லும் கால்வாய் மீது சாலை அமைப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் பதிலளிக்க தொடர்ந்து கால அவகாசம் கோரப்பட்டதால் தமிழக அரசின் வருவாய்த்துறை செயலாளர் உள்ளிட்டோருக்கு ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் பேரூர் பட்டீஸ்வரர் திருகோவில் குத்தகை விவசாயிகள் சங்கம் மற்றும் பேரூர் கீழேரி நீர் பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சிவசுப்பிரமணியம் தாக்கல் செய்த மனுவில், கோவை பேரூர் பகுதியில் விவசாயத்துக்கு நொய்யல் ஆறு முக்கிய நீராதாரமாக இருந்து வருகிறது. இந்த பாசனத்தின்  மூலம் பேரூர் கீழேரி பட்டீஸ்வரர் திருகோவிலுக்குச் சொந்தமான நிலங்களை குத்தகைக்கு எடுத்து அந்த பகுதியில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்த கோவில் நிலங்களின் ஒரு பகுதி விவசாய நிலமாகவும் மற்றொரு பகுதி நீர் வரத்துக் கால்வாயாகவும் நடுவில் மண்ணால் போடப்பட்ட சாலையும் உள்ளது. அண்மைக் 
காலமாக கால்வாய் முறையாக பரமாரிக்கப்படாமல் குப்பைகள் கொட்டுபட்டு, ஆக்கிரமிக்கப்பு அதிகரித்து வந்தது. 

மேலும் கால்வாய் மீது புதிதாக சாலை அமைக்க கோவை மாவட்ட ஆட்சியர்  அனுமதி வழங்கியிருந்தார். கால்வாய் மீது சாலை அமைக்க மாவட்ட ஆட்சியர் வழங்கிய அனுமதியை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. 

இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் பதிலளிக்க மீண்டும் கால அவகாசம் கோரப்பட்டது.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் பதிலளிக்க தொடர்ந்து கால அவகாசம் கோருவதால், தமிழக அரசின் வருவாய்த் துறை செயலாளர், பொதுப்பணித்துறை செயலாளர், கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் பேரூர் பஞ்சாயத்தின் செயல் அதிகாரி ஆகியோருக்கு தலா ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.  அந்த தொகையை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு செலுத்த வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி,  விசாரணையை வரும் அக்டோபர் 9 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து அரசு தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com