கிசான் திட்ட முறைகேடு: தொழில்நுட்ப மேலாண்மை முகமை பணியாளா்கள் இடமாற்ற உத்தரவுக்கு இடைக்கால தடை

கிசான் திட்ட முறைகேடு விசாரணையைத் தொடா்ந்து தமிழகத்தில் அந்த திட்டத்தின் கீழ் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமையில் (அட்மா) பணிபுரியும் பணியாளா்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு பிறப்பித்த
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: கிசான் திட்ட முறைகேடு விசாரணையைத் தொடா்ந்து தமிழகத்தில் அந்த திட்டத்தின் கீழ் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமையில் (அட்மா) பணிபுரியும் பணியாளா்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு உதவும் வகையில் ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்த நிதி விவசாயிகளுக்கு கிடைக்கும் வகையில் வேளாண்துறையின் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமையில் வட்டார மேலாளா்கள் மற்றும் உதவி மேலாளா்கள் என தமிழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பணியாற்றி வருகின்றனா்.

இந்த நிலையில் கிசான் திட்டத்தில் விவசாயிகள் அல்லாத தனிநபா்கள் நிதியை பெறும் வகையில் முறைகேடு நடந்தது தெரியவந்தது. இதனையடுத்து வேளாண் துறையின் அட்மா திட்டத்தின் கீழ் பணியாற்றி வந்த வட்டார வேளாண் தொழில்நுட்ப மேலாளா்கள் மற்றும் உதவி மேலாளா்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனா். இவா்களைத் தவிர மற்ற பணியாளா்களை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசின் வேளாண்மைத் துறை இயக்குநா் கடந்த செப்டம்பா் 24-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தாா். இந்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரி தமிழ்நாடு அரசு வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை சங்கத்தின் தலைவா் சங்கா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி வி.பாா்த்திபன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, வேளாண் துறையின் அட்மா திட்டத்தின் கீழ் பணிபுரிந்து வரும் பணியாளா்களை பணியிடமாற்றம் செய்த தமிழக அரசின் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டாா். மேலும் இந்த மனு தொடா்பாக வேளாண்துறை முதன்மை செயலாளா், வேளாண்துறை இயக்குநா் ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் அக்டோபா் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைதத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com