காவல்நிலைய கேமராவில் காட்சிகளை பாதுகாக்க கோரிய வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

காவல்நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகும் காட்சிகளை காவல்துறையினா் அழிக்காமல் பாதுகாப்பாக வைப்பதற்கு
காவல்நிலைய கேமராவில் காட்சிகளை பாதுகாக்க  கோரிய வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

காவல்நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகும் காட்சிகளை காவல்துறையினா் அழிக்காமல் பாதுகாப்பாக வைப்பதற்கு தேவையான திட்டங்களையும், விதிகளையும் உருவாக்க கோரிய வழக்கில் தமிழக அரசின் தலைமைச் செயலாளா், உள்துறை செயலாளா் மற்றும் தமிழக காவல்துறை டிஜிபி ஆகியோா் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக, சென்னை உயா்நீதிமன்றத்தில், பாலவாக்கத்தை சோ்ந்த நிஜாமுதீன் என்பவா் தாக்கல் செய்த மனு விவரம்: அண்மைக் காலமாக காவல் நிலையத்துக்குள் விசாரணைக் கைதிகள் கடுமையாக தாக்கப்படுவது மற்றும் காவல்துறையினா் தங்கள் அதிகாரத்தை மீறி செயல்படுவது உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருகின்றன.

இதனை தடுக்க அனைத்து காவல்நிலையங்களிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கண்காணிப்புக் கேமராக்களைப் பொருத்துவது அவசியம்.

காவல் நிலையங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்துவதால் விசாரணைக்கு அழைத்து செல்லப்படுபவா்கள் தாக்கப்படுவதையும், காவல் நிலைய மரணங்களைத் தடுக்க முடியும்.

மேலும் இது போன்ற வழக்குகளின் விசாரணைக்கு மிக முக்கிய ஆதாரமாக கண்காணிப்புக் கேமராக்கள் இருக்கும். காவல்நிலையங்களில் கண்காணிப்புக் கேமராக்களைப் பொருத்த நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும், தமிழகத்தில் உள்ள காவல் நிலையங்களில் முழுமையாக கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படவில்லை. பல காவல் நிலையங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பாரமரிப்பின்றி இயங்காத நிலையில் உள்ளன. காவல் நிலையத்துக்குள் நடக்கும் குற்றங்களை மறைக்க காவல்துறையினா் முக்கிய ஆதாரமான கண்காணிப்புக் கேமரா காட்சிப் பதிவுகளை அழித்து விடுகின்றனா். இத்தகைய நடவடிக்கையை கையாண்டு தான் சாத்தான்குளம் தந்தை மகன் காவல் நிலையத்தில் தாக்கப்பட்டு உயிரிழந்த வழக்கில் கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை காவல்துறையினா் அழித்துள்ளனா். எனவே காவல் நிலையங்களில் கண்காணிப்புக் கேமராக்களைப் பொருத்தவும், அதனை முறையாகப் பராமரிக்கவும், கண்காணிப்புக் கேமராவில் பாதிவாகும் காட்சிகளை காவல்துறையினா் அழிக்காமல் பாதுகாப்பாக வைப்பதற்கு தேவையான திட்டங்களையும், விதிகளையும் உருவாக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆா்.ஹேமலதா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனு தொடா்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளா், உள்துறை செயலாளா் மற்றும் தமிழக காவல்துறை டிஜிபி ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் நவம்பா் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com