முதல்வர் பழனிசாமியின் தாய் உடல் தகனம்

தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் (93) உடல்நலக்குறைவால் செவ்வாய்க்கிழமை காலமானார். அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
முதல்வர் பழனிசாமியின் தாயார் உடல் தகனம்
முதல்வர் பழனிசாமியின் தாயார் உடல் தகனம்

சேலம்: உடல்நலக்குறைவால் இறந்த தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாளின் உடல் செவ்வாய்க்கிழமை காலை தகனம் செய்யப்பட்டது.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே சிலுவம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கருப்பக்கவுண்டர் மனைவி தவுசாயம்மாள்  ( 93). இவருக்கு விஜயலட்சுமி என்ற மகளும், கே.கோவிந்தராஜன், தமிழக முதல்வர் கே.பழனிசாமி என்ற இரு மகன்கள் உள்ளனர்.
 

வயது மூப்பின் காரணமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த தவுசாயம்மாள், கடந்த அக்.9 ஆம் தேதி சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் உடல் நிலை மோசமாகி மாரடைப்பால் திங்கள்கிழமை இரவு இறந்தார். தாயின் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த முதல்வர்  எடப்பாடி கே. பழனிசாமி உடனடியாக சென்னையிலிருந்து கார் மூலம் சேலம் புறப்பட்டார்.

இதையடுத்து அவரது உடல் சேலம் மாவட்டம் எடப்பாடி அருகிலுள்ள சிலுவம்பாளையம் கிராமத்தில் இருக்கும் முதல்வரின் வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. சமுதாய சம்பிரதாயப்படி நள்ளிரவில் முதல்வரின் துணைவி ராதா, முதல்வரின் சகோதரரர் கோவிந்தராஜ் ஆகியோர் இறுதிச் சடங்கு நிகழ்வுகளை முன்னின்று நடத்தினர்.

முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, செவ்வாய்க்கிழமை அதிகாலை சிலுவம்பாளையம் கிராமத்துக்கு வந்தடைந்தார். பிறகு அவர் தாயின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். அமைச்சர்கள் பி.தங்கமணி, கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன், விஜயபாஸ்கர், கே.பி.அன்பழகன், உடுமலை ராதாகிருஷ்ணன், வி.சரோஜா, எஸ்.பி.வேலுமணி, ராஜேந்திரபாலாஜி மற்றும் சேலம் மாவட்ட ஆட்சியர் சிஅ.ராமன், ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன், சட்டம் ஒழுங்கு கூடுதல் ஏடிஜிபி ராஜேஷ் தாஸ், மேற்கு மண்டல ஐஜி பெரியய்யா, காவல் கண்காணிப்பாளர் தீபா கனிகர் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் முதல்வரின் தாய் உடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சிலுவம்பாளையத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இடுகாட்டிற்கு திறந்த வேனில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. இதில் அமைச்சர்கள், பொதுமக்கள், கட்சியினர் திரளாக பங்கேற்றனர். பின்னர் காவிரி கரையோரத்தில் உள்ள மயானத்தில் தவுசாயம்மாளின் உடலுக்கு முதல்வரின் சகோதரர் கோவிந்தராஜ் சிதை மூட்டினார்.

வீடு திரும்பிய முதல்வருக்கு கட்சியினர், பொதுமக்கள் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே சிலுவம்பாளையம் கிராமத்தில் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com