அடையாறு ஆற்றில் வெள்ளத்தடுப்பு பணிகள்: மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஆய்வு

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடையாறு ஆற்றில் நடைபெற்று வரும் வெள்ளத்தடுப்பு பணிகளை மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அதிகாரி சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.
அடையாறு ஆற்றில் வெள்ளத்தடுப்பு பணிகள்: மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஆய்வு

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடையாறு ஆற்றில் நடைபெற்று வரும் வெள்ளத்தடுப்பு பணிகளை மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அதிகாரி சுப்பிரமணியன் புதன்கிழமை  மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையாவுடன் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

கடந்த 2015ஆம் ஆண்டு வடகிழக்கு பருவ மழையின் போது பெய்த கனமழையால் அடையாறு ஆற்றின் கரையோர பகுதிகளான ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்பட்ட ஆதனூர், வரதராஜபுரம், முடிச்சூர், உள்ளிட்ட சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்ததால் அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். 

இதையடுத்து அடையாறு ஆற்றின் கரையோர பகுதிகளில் மீண்டும் வெள்ளநீர் சூழாமல் இருக்க கடந்த 2017ஆம் ஆண்டு நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகளுக்காக முதற்கட்டமாக ரூ100 கோடியும், இரண்டாம் கட்ட பணிகளுக்காக ரூ.244 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதியில், ஆதனூர், தாம்பரம், ஊரப்பாக்கம், பாம்பன் கால்வாய், சென்னை புறவழிச்சாலை, பள்ளிக்கரணை, நாராயணபுரம், சிட்லபாக்கம் ஆகிய பகுதிகளில் வெள்ள பாதிப்புகளைக் குறைக்க மூடிய வெள்ள வடிகால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 172 மீ.கன அடி மழைநீர் சேகரிக்கும் வகையில், மணிமங்கலம் உள்ளிட்ட ஆறு ஏரிகள் ஆழப்படுத்தப்பட்டு, கொள்ளளவு உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் அடையாறு, அடையாறு ஆற்றின் கிளைக்கால்வாய்கள் தூர்வாரப்பட்டுச் சீரமைக்கப்பட்டுள்ளது.

இதுதவிர அடையாறு ஆற்றுக்கு அதிகப்படியான மழைநீர் வருவதைத் தடுக்கும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஒரத்தூர் மற்றும் ஆரம்பாக்கம் ஏரிகளை இணைத்து ஒரத்தூர் பகுதியில் புதிய நீர்த்தேக்கம், அடையாறு ஆற்றில் வரதராஜபுரம் பகுதியில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை, அடையாறு ஆற்றின் கிளையாற்றில் சோமங்கலம் பகுதியில் ரூ4.50 கோடியில் கதவணை அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்றது.

இந்தநிலையில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடையாற்று ஆற்றில் நடைபெற்று வரும் வெள்ளத்தடுப்பு பணிகளையும், வரதராஜபுரம் பகுதியில் நடைபெற்று வரும் தடுப்பணை, ஆதனூர் ஜீரோ பாயின்ட்,  அதே பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மூடிய வெள்ள வடிகால்வாய்களை காஞ்சிபுரம் மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அதிகாரி சுப்பிரமணியன் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா மற்றும் அரசுத்துறை அதிகாரிகளுடன் புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வு நடத்தி பணிகளை விரைந்து முடிக்க  அதிகாரிகளுக்கு  உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ரமேஷ், மாவட்ட திட்ட அலுவலர் ஸ்ரீதர், ஊராக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் கவிதா, வருவாய்க் கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ, பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் குஜராஜ், குன்றத்தூர் வட்டாட்சியர் முத்து, வட்டார வளர்ச்சி அலுவலர் அப்துல்நயும்பாஷா உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com