கனரக வாகனங்களுக்கான தகுதிச்சான்று: புதிய விதிக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை

கனரக வாகனங்களுக்கான தகுதிச் சான்றை புதுப்பிக்கும்போது உதிரி பாகங்களை குறிப்பிட்ட நிறுவனத்திடம் வாங்கி, அதற்கான சான்று பெற வேண்டும் என்ற புதிய விதிகளுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்றம்
உயர்நீதிமன்றம்

கனரக வாகனங்களுக்கான தகுதிச் சான்றை புதுப்பிக்கும்போது உதிரி பாகங்களை குறிப்பிட்ட நிறுவனத்திடம் வாங்கி, அதற்கான சான்று பெற வேண்டும் என்ற புதிய விதிகளுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் தாக்கல் செய்த மனுவில், தமிழக போக்குவரத்துத்துறை ஆணையர் கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு உத்தரவு பிறப்பித்தார்.

அந்த உத்தரவில், பேருந்து, லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கானத் தகுதிச் சான்றை புதுப்பிக்கும்போது, ஒளி விளக்கு, பிரதிபலிப்பு ஸ்டிக்கர்கள், பிரேக் உள்ளிட்ட உதிரி பாகங்களை ஓசூரைச் சேர்ந்த 3எம் இண்டியா பிரைவேட் லிமிடெட், மற்றும் ஷிப்பி ரீட்டைல் டிரேடிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களிடம் வாங்க வேண்டும்.

அந்த நிறுவனத்திடம் இருந்துதான் உதிரிபாக பொருள்கள் வாங்கப்பட்டன என்பதற்கான சான்றையும் அந்த நிறுவனத்திடம் இருந்து பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

போக்குவரத்துறை ஆணையரின் இந்த உத்தரவு மோட்டார் வாகன விதிகளுக்கு முரணானது. எனவே இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, போக்குவரத்து ஆணையரின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தவிட்டார்.

மேலும் இந்த மனு தொடர்பாக போக்குவரத்து ஆணையர், 3எம் இண்டியா பிரைவேட் லிமிடெட் மற்றும் ஷிப்பி ரிடைல் டிரேடிங் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் வரும் நவம்பர் 26 -ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com