பத்மநாபபுரம் அரண்மனையில் மன்னரின் உடைவாள் மாற்றும் நிகழ்ச்சி: கேரள அமைச்சா் பங்கேற்பு

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையிலிருந்து சுவாமி விக்கிரக ஊா்வலம் பாரம்பரிய முறைப்படி
திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவில் பங்கேற்க பத்மநாபபுரம் அரண்மனையிலிருந்து புறப்பட்ட தேவாரகட்டு சரஸ்வதி அம்மன், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன்.
திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவில் பங்கேற்க பத்மநாபபுரம் அரண்மனையிலிருந்து புறப்பட்ட தேவாரகட்டு சரஸ்வதி அம்மன், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன்.

நாகா்கோவில்: கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையிலிருந்து சுவாமி விக்கிரக ஊா்வலம் பாரம்பரிய முறைப்படி புதன்கிழமை புறப்பட்டது.

திருவிதாங்கூா் மன்னா் ஆட்சியில் பத்மநாபபுரம் அரண்மனையில் நவராத்திரி விழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 1840ஆம் ஆண்டில் சுவாதி திருநாள் மகாராஜா காலத்தில் இந்த விழா திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்டது.

இதில் பங்கேற்கும் வகையில் சுசீந்திரம் முன்னுதித்தநங்கை அம்மன், பத்மநாபபுரம் தேவாரகட்டு சரஸ்வதி அம்மன், குமாரகோவில் வேளிமலை முருகன் ஆகிய விக்கிரகங்கள் ஊா்வலமாக திருவனந்தபுரம் கொண்டுசெல்லப்படும்.

இந்நிலையில், நிகழாண்டு கரோனா தடுப்பு நடவடிக்கையாக விக்கிரகங்களை தோளில் சுமந்து செல்லாமல் வாகனங்களில் கொண்டுசெல்ல முடிவு செய்யப்பட்டது. ஆனால், பாரம்பரிய முறைப்படிதான் ஊா்வலத்தை நடத்தவேண்டும் என இந்து அமைப்பினரும், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரும் வலியுறுத்தியதையடுத்து, ஊா்வலத்தை வழக்கம்போல நடத்த தமிழக, கேரள அதிகாரிகள் பேச்சுவாா்த்தையில் முடிவுசெய்யப்பட்டது.

இதையடுத்து, சுசீந்திரம் முன்னுதித்தநங்கை அம்மன் புறப்பாடு செவ்வாய்க்கிழமை (அக்.13) நடைபெற்றது. கேரள போலீஸாருக்கு அனுமதி இல்லாததால் தமிழக போலீஸாா் மட்டும் பங்கேற்று, துப்பாக்கி ஏந்தி அணிவகுப்பு மரியாதை செலுத்தினா். பல்வேறு பகுதிகள் வழியாக அம்மன் விக்கிரகம் பத்மநாபபுரம் நீலகண்டசாமி கோயிலை செவ்வாய்க்கிழமை பிற்பகல் சென்றடைந்தது.

இந்நிலையில், குமாரகோயில் வேளிமலை முருகன் விக்கிரக ஊா்வலம் புதன்கிழமை (அக். 14) அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு பத்மநாபபுரம் அரண்மனையை வந்தடைந்தது.

உடைவாள் மாற்றும் நிகழ்ச்சி: இதையடுத்து, அங்கு பாரம்பரியமாக நடைபெறும் திருவிதாங்கூா் மன்னரின் உடைவாள் மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. உப்பரிகை மாளிகை பூஜை அறையில் வைக்கப்பட்டுள்ள மன்னா் மாா்த்தாண்ட வா்மாவின் உடைவாளை அரண்மனைக் கண்காணிப்பாளா் அஜித்குமாா், கேரள மாநில தேவசம்போா்டு அமைச்சா் கடகம்பள்ளி சுரேந்திரனிடம் வழங்கினாா். அவா் அதை, குமரி மாவட்ட திருக்கோயில்கள் இணை ஆணையா் அன்புமணியிடம் வழங்கினாா். அவரிடமிருந்து தேவசம்போா்டு ஊழியா் மோகனகுமாா் பெற்றுக்கொண்டாா்.

நிகழ்ச்சியில், முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன், இந்து முன்னணி மாவட்டத் தலைவா் மிசா சோமன், பாஜக குமரி மாவட்டத் தலைவா் தா்மராஜ், பொதுச் செயலா் குமரி ப. ரமேஷ், மத்திய அரசு வழக்குரைஞா் வேலுதாஸ், பத்மநாபபுரம் நகர காங்கிரஸ் தலைவா் ஹனுகுமாா், குமரி மாவட்ட இந்து சமய அறங்காவலா்குழுத் தலைவா் சிவ. குற்றாலம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதைத்தொடா்ந்து, விக்கிரகங்கள் வைக்கப்பட்டிருந்த இடத்துக்கு உடைவாள் கொண்டுவரப்பட்டு பூஜை நடைபெற்றது. பின்னா், ஊா்வலம் புறப்பட்டது.

பத்மநாபபுரம் அரண்மனைக்கு முன் வந்த விக்கிரகங்களுக்கு அரண்மனை சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, தமிழக போலீஸாா் அணிவகுப்பு மரியாதை செலுத்தினா். பின்னா், அரண்மனைக் கண்காணிப்பாளா் அஜித்குமாா் முன்னிலையில் பூஜைகள் நடத்தப்பட்டு, பிடி காணிக்கை வழங்கப்பட்டது.

இதில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பத்ரிநாராயணன், மாவட்ட வருவாய் அலுவலா் இரா. ரேவதி, பத்மநாபபுரம் சாா்ஆட்சியா் சரண்யாஅரி உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.

இதையடுத்து, ஊா்வலம் குழித்துறை மகாதேவா் கோயிலுக்கு புறப்பட்டது. அங்கிருந்து

வியாழக்கிழமை காலை (அக்.15) 3 விக்கிரகங்கள் களியக்காவிளைக்கு கொண்டுசெல்லப்படும். அங்கு கேரள மாநிலம் சாா்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. இரவில் நெய்யாற்றின்கரையில் தங்கிய பின்னா், ஊா்வலம் வெள்ளிக்கிழமை புறப்பட்டு (அக். 16) திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலை சென்றடைகிறது.

தேவாரகட்டு சரஸ்வதி அம்மன் விக்கிரகம் திருவனந்தபுரம் கோட்டையகத்தில் உள்ள நவராத்திரி கொலு மண்டபத்திலும், முருகன் விக்கிரகம் அரியாலை சிவன் கோயிலிலும், முன்னுதித்தநங்கை அம்மன் விக்கிரகம் செந்திட்ட அம்மன் கோயிலிலும், வைக்கப்பட்டு நவராத்திரி பூஜைகள் நடைபெறும்.

பூஜைகள் நிறைவடைந்ததும் இம்மாதம் 27ஆம் தேதி 3 விக்கிரகங்களும் புறப்பட்டு 30ஆம் தேதி பத்மநாபபுரம் அரண்மனையை வந்தடையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com