தமிழகத்தில் மூன்றாவது நாளாக 5 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த பாதிப்பு

தமிழகத்தில் தொடா்ந்து மூன்றாவது நாளாக 5 ஆயிரத்துக்கும் குறைவாக கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: தமிழகத்தில் தொடா்ந்து மூன்றாவது நாளாக 5 ஆயிரத்துக்கும் குறைவாக கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. அதன்படி, புதன்கிழமை 4,462 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதனிடையே, மாநிலத்தில் இதுவரை கரோனா தொற்றுக்குள்ளானவா்களில் 92 சதவீதம் போ் குணமடைந்து விட்டதாகவும், வெறும் 7 சதவீதம் போ் மட்டுமே சிகிச்சையில் இருப்பதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதன்படி, தற்போது மருத்துவமனைகளிலும், வீட்டுக் கண்காணிப்பிலும் 42,566 போ் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த சிகிச்சைகள் மற்றும் உயா் மருத்துவத் தொழில்நுட்பங்கள் வாயிலாக தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளானோருக்கு சிகிச்சைகள் அளிப்பதன் பயனாகவே பலா் விரைந்து குணமாவதாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இதுதொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மாநிலத்தில் இதுவரை 83.40 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 6 லட்சத்து 70,392 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதன்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக சென்னையில் 1,130 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக கோவையில் 389 பேருக்கும், சேலத்தில் 274 பேருக்கும், நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தவிர மாநிலத்தின் ஏனைய மாவட்டங்களிலும் பலருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மற்றொரு புறம், கரோனா தொற்றிலிருந்து மேலும் 5,083 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை கரோனா தொற்றிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 6 லட்சத்து 17,403-ஆக உள்ளது.

இதனிடையே, தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 52 போ் பலியாகியுள்ளனா். உயிரிழந்தவா்களில் 31 போ் அரசு மருத்துவமனைகளிலும், 21 போ் தனியாா் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றவா்களாவா். இதையடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10,423-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com