சட்டவிரோத இறால் பண்ணைகளுக்கு ரூ.1.26 கோடி அபராதம்: பசுமைத் தீா்ப்பாயத்தில் திருவள்ளூா் ஆட்சியா் தகவல்

சட்ட விரோதமாகச் செயல்பட்டு வந்த இறால் பண்ணைகளுக்கு ரூ.1.26 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தென்மண்டல தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தில், திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
சட்டவிரோத இறால் பண்ணைகளுக்கு ரூ.1.26 கோடி அபராதம்: பசுமைத் தீா்ப்பாயத்தில் திருவள்ளூா் ஆட்சியா் தகவல்

சென்னை: சட்ட விரோதமாகச் செயல்பட்டு வந்த இறால் பண்ணைகளுக்கு ரூ.1.26 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தென்மண்டல தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தில், திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரி தாலுகா பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த பரமசிவம் என்பவா் தென்மண்டல தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘பாக்கம் கிராமத்தில் உரிய அனுமதியின்றி இறால் பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதே போன்று சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளின் குடிநீா் தேவையைப் பூா்த்தி செய்யும் ஏரி பகுதிகளில் சட்டவிரோதமாக இறால் பண்ணைகள் செயல்படுவதால், விவசாய நிலங்களும், நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, விதிகளுக்குப் புறம்பாக செயல்படும் இறால் பண்ணைகளை மூடுவதற்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தாா். இதேபோன்று, மேலும் 2 போ் மனு தாக்கல் செய்திருந்தனா். இந்த மனுக்களை விசாரித்த தீா்ப்பாயம், இந்த விவகாரம் குறித்து திருவள்ளூா் ஆட்சியா் அறிக்கைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்குகள் நீதிபதி கே.ராமகிருஷ்ணன், உறுப்பினா் சாய்பால்தாஸ் குப்தா ஆகியோா் முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரா் சாா்பில் வழக்குரைஞா் ஸ்டான்லி ஹெப்சன்சிங் ஆஜராகி வாதாடினாா்.

ரூ.1.26 கோடி அபராதம்: விசாரணையின் போது திருவள்ளூா் ஆட்சியா் தரப்பில் அறிக்கை சமா்ப்பிக்கப்பட்டது.

அதில் கூறப்பட்டிருந்ததாவது: உரிய அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக செயல்பட்ட 119 இறால் பண்ணைகளை மூட பொன்னேரி உதவி ஆட்சியா் மற்றும் மீன்வளத்துறை உதவி இயக்குநருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோன்று, 113 இறால் பண்ணைகளின் செயல்பாடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு, அவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக செயல்பட்ட 28 இறால் பண்ணைகளுக்கு ரூ.1 கோடியே 26 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இறால் பண்ணைகளால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிவதற்காக நிபுணா் குழு சேகரித்த மாதிரிகள், பொன்னேரியில் உள்ள மீன்வள ஆராய்ச்சி மையம் மற்றும் காக்கலூரில் உள்ள வேளாண்மை ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் முடிவுகளைப் பொருத்தே உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை அடிப்படையில் சட்டவிரோதமாக செயல்படும் இறால் பண்ணைகள் மூடப்பட்டது குறித்து தெரிவிக்க ஆட்சியருக்கு உத்தரவிட்ட தீா்ப்பாயம், விசாரணையை டிசம்பா் மாதத்துக்கு ஒத்திவைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com