'முரளிதரன் வாழ்க்கைப் படத்திலிருந்து விஜய் சேதுபதி விலக வேண்டும்'

முரளிதரன் வாழ்க்கைப் படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகும் முடிவை அறிவிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 
சீமான்
சீமான்

முரளிதரன் வாழ்க்கைப் படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகும் முடிவை அறிவிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர், வெளியிட்ட அறிக்கையில், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கைப்படத்தில் தம்பி விஜய் சேதுபதி நடிப்பது தொடர்பான செய்தியை அறிந்தேன். தம்பிக்கு நாம் சொல்லத் தேவை எதுவுமிருக்காது; அவரே புரிந்துகொண்டு அப்படத்திலிருந்து விலகுவார் என அமைதிக் காத்தேன். ஆனால், தற்போது அப்படத்தின் அடுத்தகட்டப்பணி தொடங்கியிருப்பதால் தம்பிக்கு அன்போடு அறிவுறுத்துகிறேன். முத்தையா முரளிதரனை வெறுமனே ஒரு விளையாட்டு வீரர் எனச் சுருக்கி மதிப்பிட முடியாது. தனது உலகளாவியப் புகழ் வெளிச்சத்தைக் கொண்டு சிங்கள அரசின் திட்டமிட்ட இனப்படுகொலையையும், இன ஒதுக்கல் கொள்கைகளையும் நியாயப்படுத்திப் பேச, தமிழர் எனும் இன அடையாளத்தைப் பயன்படுத்தும் சிங்களப் பேரினவாதத்தின் கைக்கூலியே முரளிதரன். 2 இலட்சம் தமிழர்கள் கொன்றொழிக்கப்பட்டு ஈழ நிலம் முற்றாய் பிணக்காடாய் மாறி, இரத்தச் சகதியிலே எமது உறவுகளின் உடல்களும், எங்கும் தமிழர்களின் மரண ஓலங்களும் கேட்ட நொடிப்பொழுதில் எவ்விதத் தயக்கமோ, குற்றவுணர்வோ இன்றி, ‘இனமழிப்பு செய்யப்பட்ட அந்நாளை எனது வாழ்வின் மகிழ்ச்சிகரமான நாளாகக் கருதுகிறேன்’ என அறிவித்தவர் முத்தையா முரளிதரன். 

இனப்படுகொலையாளன் மகிந்தா ராஜபக்சே நல்லாட்சி தருவதாகக் கூறிய முரளிதரன், அவரை கறுப்பினப்போராளி நெல்சன் மண்டேலாவோடு ஒப்பிட்டவர். அங்கு நடந்தத் தேர்தல்களின்போது தீவிர தமிழர் எதிர்ப்பு மனநிலை கொண்ட சிங்கள இனவாதிகளுக்கு ஆதரவாகவும், காணாமல் போன தங்கள் பிள்ளைகளை மீட்டுத்தர வேண்டி தமிழ்த்தாய்மார்கள் நடத்திய போராட்டத்தை துச்சமென நினைத்து அதனைக் கொச்சைப்படுத்தியும் பேசியது துரோகத்தின் உச்சம். மாத்தையா, கருணா வரிசையில் பிறந்த இனத்திற்குத் துரோகம் செய்திட்ட முத்தையா முரளிதரனை பன்னாட்டுச்சமூகத்திற்கு தமிழினப்படுகொலை நிகழவில்லை எனக் கூற வைக்கவே சிங்களப்பேரினவாத அரசும், அதன் ஆட்சியாளர்களும் நிலைநிறுத்தி வைத்திருக்கிறார்கள். அத்தகைய நிலைப்பாடு கொண்ட சிங்களக் கைக்கூலி முரளிதரன் வாழ்க்கையைத் திரைமொழியில் காட்சிப்படுத்துவது ஈழ விடுதலைப்போராட்டத்திற்கு எதிரானதாகத்தான் அமையும்.

தமிழர்களின் உணர்வுகளுக்கு அணுவளவும் மதிப்பளிக்காது அப்படத்தில் நடித்திட முனைப்புகாட்டுவது விஜய் சேதுபதியின் திரையுலக வாழ்க்கைக்கு நல்லதல்ல. ராஜபக்சேவின் மகன் இப்படத்தைக் கொண்டாடும்போதே அடுத்த நொடியே அப்படத்திலிருந்து விலகியிருக்க வேண்டும். அதற்குப் பிறகும், எந்த நம்பிக்கையில் படத்தின் முன்னோட்டக்காணொளி வெளியீட்டை செய்தீர்கள்? முரளிதரன் வாழ்க்கைப்படத்தை தமிழகத்திலேயே திரையிட்டுவிடலாம் எனும் அளவுக்கு எண்ணம் எங்கிருந்து வந்தது? முரளிதரன் எனும் சிங்களக் கைக்கூலியைக் கொண்டாடினால் தமிழர்களின் மனங்களிலிருந்து தூக்கி எறியப்படுவோம் என்பதை உணர வேண்டாமா? முரளிதரனின் வாழ்க்கையைக் காட்சிப்படுத்தி கொழும்பு வீதிகளில் வேண்டுமானால் திரையிடலாம். தமிழகத்தின் வீதிகளில் ஒருநாளும் அது நடக்கப்போவதில்லை. ஆகவே, உலகெங்கும் வாழும் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து உடனடியாக இப்படத்திலிருந்து முற்றிலுமாக விலகும் அறிவிப்பை வெளியிட வேண்டும் என தம்பி விஜய் சேதுபதிக்கு அன்போடு அறிவுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com