அண்ணா பல்கலை.க்கு உயர் சிறப்புத் தகுதி தேவையில்லை: அமைச்சர் கே.பி.அன்பழகன்

மாணவர்களின் கல்வி உரிமை பாதிக்கின்ற உயர் சிறப்பு தகுதி அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தேவையில்லை என மாநில உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்தார்.
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு தகுதி தேவையில்லை அமைச்சர் கே.பி.அன்பழகன்
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு தகுதி தேவையில்லை அமைச்சர் கே.பி.அன்பழகன்

தருமபுரி: மாணவர்களின் கல்வி உரிமை பாதிக்கின்ற உயர் சிறப்பு தகுதி அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தேவையில்லை என மாநில உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் தருமபுரியில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கனவே சர்வதேச அளவில் புகழ் பெற்று விளங்குகிறது. இப் பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு தகுதி கோரி துணைவேந்தர் விண்ணப்பித்தது குறித்து அவரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது. 

இந்த உயர் சிறப்பு தகுதியில், தமிழக அரசு ஏற்கனவே நடைமுறைப்படுத்தி வரும் 69 சதவீத இட ஒதுக்கீடு முறை பாதிக்கும். மேலும் மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு நடத்தும் சூழல் மற்றும் கல்விக் கட்டணம் கூடுதலாக வசூலிக்கும் நிலை ஏற்படும். ஆகவே மாணவர்களின் கல்வி உரிமை பாதிக்கின்ற அம்சங்கள் அதில் உள்ளதால் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு தகுதி தேவையில்லை. தற்போது உள்ள நடைமுறை தொடரும். 

பல்கலைக்கழகத்துக்கு தேவையான நிதியை தமிழக அரசே வழங்கும். மேலும் துணைவேந்தர் சூரப்பா கடிதம் எழுதியது தொடர்பாக, அவரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது. இந்த விளக்கத்தின் அடிப்படையில் அவர் மீதான தொடர் நடவடிக்கை குறித்து தமிழக அரசு மேற்கொள்ளும். 

மத்திய அரசு தனது புதிய கல்விக் கொள்கையில் வருகின்ற 2035 ஆம் ஆண்டுக்குள் உயர்கல்வியில் 35 சதவீத விழுக்காட்டினை அடைய இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால் தமிழகத்தில் தற்போதே 49.6 விழுக்காடு மாணவர்கள் உயர்கல்வி பயின்று வருகின்றனர். 15 ஆண்டுகளுக்கு முன்பே அந்த இலக்கை நாம் எட்டியுள்ளோம். 

தமிழக அரசு உயர் கல்வித்துறை யில் வெளிப்படைத்தன்மையோடு செயல்பட்டு வருகிறது. துணைவேந்தர் பணி மூன்றாண்டுகளுக்கு மட்டுமே இருக்கும். ஆனால் தமிழக அரசு தொடர்ந்து பல்கலைக்கழக மேம்பாட்டு பணியில் ஈடுபட்டு வருகிறது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் 4 மண்டல மையங்கள், 13 உறுப்புக் கல்லூரிகள், 461 இணைப்புக் கல்லூரிகள் உள்ளன. இவை அனைத்துக்குமான மேம்பாட்டு பணியில் அரசு ஈடுபட்டு வருகிறது. 

மாணவர்களின் நலன் காப்பதே தமிழக அரசின் நோக்கம். மாணவர்களின் கல்வி உரிமையை எந்தவகையிலும் தமிழக அரசு விட்டுத்தராது. பிளஸ் 2 உடனடி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள், அரசு கலைக்கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களில் இந்த மாத இறுதிக்குள் விண்ணப்பித்த சேர்க்கை பெறலாம் என்று அமைச்சர் கே.பி. அன்பழகன் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com