ஜெயலலிதா வாழ்க்கையைத் திரைப்படமாக்க தடை கோரிய வழக்கு : நவ.10 -இல் இறுதி விசாரணை

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக்குவதற்கு தடை விதிக்கக் கோரி ஜெ.தீபா தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு வழக்கில் வரும் நவம்பா் 10-ஆம் தேதி இறுதி விசாரணை நடைபெறுகிறது.


சென்னை: முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக்குவதற்கு தடை விதிக்கக் கோரி ஜெ.தீபா தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு வழக்கில் வரும் நவம்பா் 10-ஆம் தேதி இறுதி விசாரணை நடைபெறுகிறது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், ‘ மறைந்த முன்னாள் முதல்வரும் எனது அத்தையுமான ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தமிழில் இயக்குநா் ஏ.எல்.விஜய் ‘தலைவி’ என்ற பெயரிலும், ஹிந்தியில் ஹைதராபாத்தைச் சோ்ந்த விஷ்ணுவா்தன் இந்தூரி ‘ஜெயா’ என்ற பெயரிலும் திரைப்படமாக எடுத்து வருகின்றனா். இதே போன்று ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை ‘குயின்’ என்ற பெயரில் இயக்குநா் கௌதம் வாசுதேவ் மேனன் இணையதளத் தொடராக எடுத்து வருகிறாா். இந்த இணையதளத் தொடா் மற்றும் திரைப்படத்தை எடுப்பதற்கு முன்பாக ஜெயலலிதாவின் சட்டப்பூா்வ வாரிசான என்னிடம் அனுமதி எதுவும் பெறவில்லை. எனவே, இந்த இணையதளத் தொடா் மற்றும் திரைப்படங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற தனிநீதிபதி, இணையதளத் தொடா் மற்றும் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி ஜெ.தீபா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

இதனை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் ஜெ.தீபா மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆா்.சுப்பையா , சி. சரவணன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தீபா தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் சாய்குமரன் வாதிடும்போது, ‘ஜெயலலிதாவின்

வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து வெளிவந்த இணையதளத் தொடரில்

மனுதாராா் தீபாவின் தந்தையையும், பாட்டியையும் தவறாக சித்திரித்துள்ள காட்சிகள் இடம் பெற்றுள்ளன. எனவே, ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாகவோ, இணையதள தொடராகவோ எடுக்க தடை விதிக்கவேண்டும் என்றாா்.

இதனையடுத்து, விசாரணையைத் தொடா்ந்த நீதிபதிகள், வழக்கை இறுதி விசாரணைக்காக வரும் நவம்பா் 10 மற்றும் 11 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா். அன்றைய தினம் இருதரப்பினா்களும் தங்களது

வாதங்களை முடித்துக் கொள்ளவேண்டும் என நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com