சிறப்பு ரயில்களுக்கான செலவில் மத்திய அரசின் பங்களிப்பு இல்லவே இல்லை: தெற்கு ரயில்வே

தமிழகத்திலிருந்து இயக்கப்பட்ட ரயில்களுக்கான செலவுத் தொகையில் மத்திய அரசு எந்தப் பங்கையும் செலுத்தவில்லை 
சிறப்பு ரயில்களுக்கான செலவில் மத்திய அரசின் பங்களிப்பு இல்லவே இல்லை: தெற்கு ரயில்வே
சிறப்பு ரயில்களுக்கான செலவில் மத்திய அரசின் பங்களிப்பு இல்லவே இல்லை: தெற்கு ரயில்வே

புலம்பெயர் தொழிலாளர்களுக்காக தமிழகத்திலிருந்து இயக்கப்பட்ட ரயில்களுக்கான செலவுத் தொகையில் மத்திய அரசு எந்தப் பங்கையும் செலுத்தவில்லை என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு தெற்கு ரயில்வே பதிலளித்துள்ளது.

மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயில்களில், பல்வேறு மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வந்து பணியாற்றிய ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்ட பொது முடக்கக் காலத்தில், தமிழகத்தில் இருந்த ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்ல 265 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. அதற்கான மொத்த செலவு ரூ.34.6 கோடியாகும். இதில் சுமார் 3.54 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று சேர்ந்தனர்.

இந்த நிலையில், சமூக ஆர்வலர் பாண்டியராஜா, தெற்கு ரயில்வேக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பிய கேள்விக்கு, தெற்கு ரயில்வே இயக்கிய சிறப்பு ரயில்களுக்கான கட்டணச் செலவில் மத்திய அரசின் பங்களிப்பு எதுவும் இல்லை என்று பதிலளிக்கப்பட்டுள்ளது.

மாநில அரசின் ஏற்பாட்டின் பேரில் புலம்பெயர் தொழிலாளர்கள் கண்டறியப்பட்டு, முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள் மூலம், முற்றிலும் படுக்கை வசதி கொண்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.

தமிழகத்தில் இருந்துதான் அதிக சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்கியுள்ளது. தெற்கு ரயில்வே இயக்கிய ஒட்டுமொத்த சிறப்பு ரயில்களின் எண்ணிக்கை 507 ஆக இருக்கும்நிலையில், தமிழகத்தில் இருந்து மட்டும் 50% ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன.

சிறப்பு ரயில்களை இயக்குவதற்கான மொத்த செலவில் மத்திய அரசு 85 சதவீதத்தையும், மாநில அரசுகள் 15 சதவீதத்தையும் பகிர்ந்துகொள்ளும் என்றுதான் தொடக்கம் முதலே கூறப்பட்டது. ஆனால், தெற்கு ரயில்வே இயக்கிய சிறப்பு ரயில்களுக்கான மொத்தக் கட்டணத்தையும் தமிழக அரசே செலுத்தியிருப்பது தற்போது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது.
 

265 சிறப்பு ரயில்களில், உத்தரகண்ட் அரசின் கோரிக்கைக்கு இணங்க இயக்கப்பட்ட ஒரு ரயிலுக்கு மட்டும், அந்த மாநில அரசு கட்டணத்தை செலுத்தியது. மற்ற 264 ரயில்களில் பயணம் செய்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கான கட்டணத்தை தமிழக அரசே செலுத்தியுள்ளது.

ஒட்டுமொத்தமாக வசூலிக்கப்பட்ட ரூ.66.28 கோடியில் தமிழக அரசு மட்டும் ரூ.34.6 கோடியை செலுத்தியுள்ளது. மாநிலத்தின் 26 ரயில்நிலையங்களில் இருந்து இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன என்றும் அந்த தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com