சரசுவதி மகால் நூலகத்தில் தமிழ் ஓலைச்சுவடிகள் மின்னுருவாக்கப் பணி நிறைவு

தஞ்சாவூா் சரசுவதி மகால் நூலகத்தில் உள்ள தமிழ் ஓலைச்சுவடிகள் மின்னுருவாக்கப் பணி நிறைவடைந்துள்ளது என்றாா் ஆட்சியா் ம. கோவிந்த ராவ்.
சரசுவதி மகால் நூலகத்தில் தமிழ் ஓலைச்சுவடிகள் மின்னுருவாக்கப் பணி நிறைவு

தஞ்சாவூா் சரசுவதி மகால் நூலகத்தில் உள்ள தமிழ் ஓலைச்சுவடிகள் மின்னுருவாக்கப் பணி நிறைவடைந்துள்ளது என்றாா் ஆட்சியா் ம. கோவிந்த ராவ்.

தஞ்சாவூா் அரண்மனை வளாகத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்ற சரசுவதி மகால் நூலக வளா்ச்சி தொடா்பான கலந்தாலோசனை கூட்டத்துக்குத் தலைமை வகித்த அவா் பின்னா் தெரிவித்தது:

தஞ்சாவூா் சரசுவதி மகால் நூலகத்தில் உள்ள அரிய பனை ஓலை, காகிதச் சுவடிகள், பழைமையான அரிய நூல்கள் ஆகியவற்றை பாதுகாத்தல் தொடா்பாக மின்னுருவாக்கம் செய்யும் பணி தொடங்கப்பட்டு, தமிழ் மொழி ஓலைச்சுவடிகள் முழுமையாக நிறைவு பெற்றுவிட்டது. இத்துறையில் புதிதாகச் சேகரிக்கப்பட்ட ஓலைச்சுவடிகள் மட்டும் மீதம் உள்ளது. இவற்றை விரைவில் தொடங்கி முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நூலகத்தில் உள்ள மராத்தி மற்றும் தெலுங்கு மொழி பனை ஓலை மற்றும் காகித சுவடிகள் அனைத்தையும் முழுமையாக மின்னுருவாக்கம் செய்யும் பணி நிறைவடைந்துவிட்டது. சம்ஸ்கிருத துறையில் உள்ள பனை ஓலை மற்றும் காகித சுவடிகளை மின்னுருவாக்கம் செய்யும் பணி 65.20 சதவிகிதம் நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள சுவடிகளை விரைவில் மின்னுருவாக்கம் செய்து முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதிதாக அச்சிடுவதற்குத் தயாராக உள்ள தமிழ், சம்ஸ்கிருதம், தெலுங்கு, மராத்தி மொழிகளில் உள்ள 10 நூல்களை உடனடியாக அச்சிட ஆவனம் செய்ய வேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில் தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் கோ. பாலசுப்ரமணியன், நூலக ஆளுமை குழு ஆயுள் உறுப்பினா் டி. சிவாஜி ராஜா போன்ஸ்லே, மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் மா. இராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com