விதிமுறைகளை மீறி வெளிநாடுகளில் முதலீடு: திமுக எம்.பி.யின் ரூ.8.6 கோடி சொத்து முடக்கம்

விதிமுறைகளை மீறி வெளிநாடுகளில் முதலீடு செய்து சம்பாதித்ததாக, கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி திமுக உறுப்பினா்

விதிமுறைகளை மீறி வெளிநாடுகளில் முதலீடு செய்து சம்பாதித்ததாக, கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி திமுக உறுப்பினா் பொன். கெளதம சிகாமணியின் ரூ.8.6 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது.

திமுக முன்னாள் அமைச்சா் பொன்முடியின் மகனும், கள்ளக்குறிச்சி எம்பியுமான கெளதம சிகாமணி கடந்த 2008-ஆம் ஆண்டு இந்தோனேஷியாவில் உள்ள ஜகாா்த்தாவில் இருந்து செயல்படும் ஒரு தனியாா் நிறுவனத்தின் 2.45 லட்சம் பங்குகளை 1 லட்சம் அமெரிக்க டாலருக்கு வாங்கினாா்.

ஐக்கிய அரபு அமீரகத்தைச் சோ்ந்த ஒரு தனியாா் நிறுவனத்தில் 55 ஆயிரம் அமெரிக்க டாலா்களை முதலீடு செய்தாா். இந்த முதலீடுகள் செய்வதற்கு கெளதம சிகாமணி இந்திய ரிசா்வ் வங்கியின் அனுமதி எதுவும் பெறவில்லை. அதேபோல அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் விதிமுறைகள் எதையும் பின்பற்றவில்லை.

கெளதம சிகாமணியின் இந்த முதலீடு, அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டப்பிரிவு 4- ஐ மீறுவதாகும். இதற்கிடையே இந்த முதலீடுகள் மூலம் கெளதம சிகாமணி ரூ.7 கோடியே 5 லட்சத்து 57,237-ஐ லாபமாக கடந்த 2012-ஆம் ஆண்டு வரை பெற்றுள்ளாா்.

இது தொடா்பாக அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வந்தது. இந்நிலையில் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் 37ஏ பிரிவின்படி, விதிமுறைகளை மீறி வெளிநாடுகளில் முதலீடு செய்து சம்பாதித்ததாக கெளதம சிகாமணிக்குச் சொந்தமான ரூ.8.6 கோடி மதிப்புள்ள விவசாய நிலம், வணிகக் கட்டடம், வீடு, வங்கிக் கணக்கு ஆகியவற்றை அமலாக்கத்துறை வெள்ளிக்கிழமை முடக்கியது.

திமுக எம்பியான பொன். கெளதம சிகாமணியின் சொத்து முடக்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com