திமுக எம்எல்ஏ மா. சுப்ரமணியன் மகன் காலமானார்

சைதாப்பேட்டை திமுக எம்எல்ஏ மா. சுப்ரமணியன் மகன் அன்பழகன் உடல் நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 34.
திமுக எம்எல்ஏ மா. சுப்ரமணியன் மகன் அன்பழகன் காலமானார்
திமுக எம்எல்ஏ மா. சுப்ரமணியன் மகன் அன்பழகன் காலமானார்


சென்னை: சைதாப்பேட்டை திமுக எம்எல்ஏ மா. சுப்ரமணியன் மகன் அன்பழகன் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். அவருக்கு வயது 34.

சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த அன்பழகன், இன்று சிகிச்சை பலனின்றி பலியானார்.

திமுகவின் சென்னை தெற்கு மாவட்டச் செயலாளரும், சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான மா. சுப்ரமணியத்துக்கும், அவரது மனைவிக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை பெற்று குணமடைந்தனர்.

சுப்ரமணியனின் மகன் அன்பழகனுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு, கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்தார்.

இது குறித்து மா. சுப்ரமணியனின் உதவியாளர் சிந்தன் கூறுகையில், அன்பழகனுக்கு கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், மூன்று நாள்களுக்கு முன்பு எடுத்த பரிசோதனையில் அவருக்கு கரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. ஆனாலும் அவருக்கு நுரையீரலில் ஏற்பட்ட தொற்று காரணமாக அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

மாற்றுத் திறனாளியான அன்பழகனை, அவரது தாய் காஞ்சனா, மிகவும் அன்போடு கவனித்து வந்துள்ளார்.

இது பற்றி சிந்தன் பேசுகையில், அவர் எப்போதுமே வீட்டை விட்டு வெளியே வர மாட்டார், தனது மகனை கவனித்துக் கொள்வதிலேயே முழுக் கவனமும் செலுத்தினார். அன்பழகன் தனது விரல் அசைவுகள் மூலமாகத்தான் தனது தேவைகளை வெளிப்படுத்துவார். 

அன்பழகனுக்கு நடிகர் ரஜினிகாந்த் என்றால் மிகவும் பிடிக்கும். ரஜினிகாந்தின் தீவிர ரசிகர். ரஜினி படத்தைப் பார்த்தாலே போதும், அவரது பாடல்களை முனுமுனுப்பது, வசனங்களை பேச முயற்சிப்பது போன்றவற்றை செய்வார். அவர் மிகவும் புத்திசாலி. ஒருவர் வரும் சத்தத்தைக் கொண்டே யார் வருகிறார்கள் என்பதை சொல்லிவிடுவார்.

அவரது அப்பா வெளியே சென்றுவிட்டு வீட்டுக்குள் நுழையும் போதே அவரது காலடி சத்தத்தைக் கேட்டுவிட்டு அப்பா அப்பா என்று குரல் கொடுப்பார் என்று மன வருத்தத்தோடு பகிர்ந்து கொண்டார் சிந்தன்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com