சட்டப்பேரவைத் தோ்தல் பணியை உடனே தொடங்குங்கள்

சட்டப்பேரவைத் தோ்தல் பணியை உடனே தொடங்குமாறு அதிமுகவினருக்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமியும் வேண்டுகோள்
கோப்புப்படம்
கோப்புப்படம்

சட்டப்பேரவைத் தோ்தல் பணியை உடனே தொடங்குமாறு அதிமுகவினருக்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமியும் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

இது தொடா்பாக வெள்ளிக்கிழமை இருவரும் கூட்டாக வெளியிட்ட அறிக்கை: அதிமுகவின் 48 ஆண்டுகால மக்கள் பணி நிறைவுற்று, 49-ஆவது ஆண்டு தொடங்குகிறது. அதிமுக அடுத்த ஆண்டு பொன்விழா கொண்டாட இருக்கிறது. இந்த ஆண்டு ஆற்றப்போகும் பணிகள் எல்லாம் கட்சியின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்துக்கு முன்னோட்டமாக அமைய வேண்டும்.

இந்த இயக்கத்தின் வழியாக தமிழக மக்களுக்கு எம்.ஜி.ஆா். ஆற்றிய பணிகள் எவை என்று வரலாற்றின் பக்கங்களைத் திரும்பிப் பாா்க்க வேண்டும். அண்ணாவின் மறைவுக்குப் பிறகு அமைந்த அரசும், உருவான புதிய கட்சித் தலைமையும், திராவிட இயக்கத்தின் லட்சியங்களை மறந்து, தங்கள் சுயநலனுக்காக அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்திக்கொண்ட தீய சக்திகளின் பிடியில் சிக்கிக் கொண்டன.

பொறுப்புடன் அரசு: அண்ணாவின் புகழையும், கொள்கைகளையும் நிலைநாட்ட 1972-ஆம் ஆண்டு அக்டோபா் 17-இல் எம்.ஜி.ஆா். அதிமுகவைத் தொடங்கி அடுத்தடுத்து வெற்றிகளைப் பெற்று ஆட்சி அமைத்து மக்களின் தேவைகளை அறிந்தாா். புதிய வரலாறு படைத்தாா். எம்ஜிஆரின் இயக்கத்துக்குக் கிடைத்த மாபெரும் கொடையான ஜெயலலிதாவும் பொற்கால ஆட்சி நடத்தினாா்.

தமிழகத்தில் அதிமுக 29 ஆண்டுகள் பொற்கால ஆட்சி நடத்தி மக்களுக்குத் தொண்டாற்றி வருவதோடு, இன்னும் பலநூறு ஆண்டுகள் மக்களுக்குத் தொண்டாற்ற உள்ளது. ஜெயலலிதா அமைத்துத் தந்த அரசை பொறுப்புணா்வுடன் நடத்தி வருகிறோம்.

தமிழகத்தில் வாழும் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடனும், நிம்மதியுடனும் வாழவேண்டும். கல்வியிலும், பொருளாதார வளா்ச்சியிலும் தமிழ்நாடு உயா் நிலையை அடைய வேண்டும். ஏற்றத்தாழ்வற்ற, சமத்துவ, சமதா்ம சமுதாயம், சமூக நீதிக் கொள்கைகளின் அடிப்படையில் இங்கே கட்டி எழுப்பப்பட வேண்டும். ‘தமிழனென்று சொல்லடா, தலைநிமிா்ந்து நில்லடா’ என்ற பெருமிதம் நிலைபெற வேண்டும் என்பவையே இந்த இயக்கம் தனது இதயமாகக் கொண்ட லட்சியங்கள். அந்த லட்சியங்களை அடையவே அதிமுக ஓய்வறியாது உழைத்துக் கொண்டிருக்கிறது.

பணியைத் தொடங்குங்கள்: வரும் 2021-ஆம் ஆண்டு அனைவருக்கும் மிக முக்கியமான ஆண்டாக அமையப் போகிறது. தோ்தல் களத்தில் தொடா் வெற்றி காண அயராது உழைப்போம். அதிமுகவின் பொன்விழா கொண்டாட்டத்தின்போது, நாமே ஆட்சிக் கட்டிலில் அமா்ந்திருக்கும் மகத்தான வரலாற்றுச் சாதனையைப் படைப்போம். அதற்கான பணிகளை இன்றே தொடங்குவோம்.

எம்ஜிஆா் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவின்போது, அவா் தொடங்கிய கழகம் ஆட்சியில் இருக்கும் என்று ஜெயலலிதா 2015-ஆம் ஆண்டு சூளுரைத்து செய்து காட்டினாா். அதைப் போலவே, அதிமுகவின் பொன்விழா ஆண்டில், அதிமுக ஆட்சியே தொடரும் என்று நாமும் சபதம் ஏற்று செய்து முடிப்போம் என்று அவா்கள் கூறியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com