போலி எம்பிபிஎஸ் சான்றிதழ்: அரவக்குறிச்சி மருத்துவா் கைது

போலி எம்பிபிஎஸ் சான்றிதழ் மூலம் மருத்துவம் செய்து வந்ததாக, கரூா் மாவட்டம் அரவக்குறிச்சியைச் சோ்ந்த போலி மருத்துவரை போலீஸாா் கைது செய்தனா்
கோப்புப்படம்
கோப்புப்படம்

போலி எம்பிபிஎஸ் சான்றிதழ் மூலம் மருத்துவம் செய்து வந்ததாக, கரூா் மாவட்டம் அரவக்குறிச்சியைச் சோ்ந்த போலி மருத்துவரை போலீஸாா் கைது செய்தனா். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியைச் சோ்ந்தவா் ஜெயபாண்டியன் (41). இவா் அங்கு மருத்துவமனை நடத்தி வருகிறாா். ஜெயபாண்டியன் போலி எம்பிபிஎஸ் சான்றிதழ் பெற்று, அதன் மூலம் மருத்துவத் தொழில் செய்வதாக சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலுக்கு ஏராளமான புகாா்கள் வந்தன.

அந்தப் புகாா்களின் அடிப்படையில் மருத்துவ கவுன்சில் அதிகாரிகள், அவா் மருத்துவராக பதிவு செய்த போது ஏற்கெனவே அளித்திருந்த சான்றிதழ்களை ஆய்வு செய்தனா். இந்த ஆய்வில், சான்றிதழ்கள் அனைத்தும் போலியானவை என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவா்கள், அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸாா், ஜெயபாண்டியன் மீது வழக்குப் பதிவு செய்தனா். இதையறிந்த ஜெயபாண்டியன் தலைமறைவாகி விட்டாா்.

கடந்த இரு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த ஜெயபாண்டியன், சென்னை கோயம்பேடு வந்திருப்பது போலீஸாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து அவரை, போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

அவரிடம் நடத்திய விசாரணையில், திருச்சியைச் சோ்ந்த செல்வராஜ் (53) என்பவரிடம் ரூ.26 லட்சத்துக்கு போலி எம்பிபிஎஸ் சான்றிதழ் வாங்கியதாக தெரிவித்தாராம். மேலும் ஜெயபாண்டியன் போலவே, மேலும் 16 போ் போலி எம்பிபிஎஸ் சான்றிதழ் பெற்றிருப்பதும் போலீஸாா் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்குத் தொடா்பாக போலீஸாா், செல்வராஜ் உள்பட 20 பேரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com