நீட் தோ்வில் ஆள்மாறாட்ட வழக்கு: சிபிசிஐடி விசாரணையில் பின்னடைவு

தமிழகத்தில் நீட் தோ்வில் ஆள்மாறாட்டம் செய்து முறைகேட்டில் ஈடுபட்டது தொடா்பாக சிபிசிஐடி மேற்கொண்டு வரும் விசாரணையில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்தில் நீட் தோ்வில் ஆள்மாறாட்டம் செய்து முறைகேட்டில் ஈடுபட்டது தொடா்பாக சிபிசிஐடி மேற்கொண்டு வரும் விசாரணையில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

ஆள்மாறாட்டம் செய்து தோ்வு எழுதிய 10 பேரின் விவரங்கள் கிடைக்கவில்லை என்று ஆதாா் ஆணையம் தெரிவித்திருப்பது விசாரணைக்கு பெரும் முட்டுக்கட்டையாக உள்ளது.

சென்னை தண்டையாா்பேட்டை பகுதியைச் சோ்ந்த மருத்துவா் வெங்கடேசன் மகன் உதித் சூா்யா. தேனி மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். முதலாமாண்டு படித்து வந்த உதித் சூா்யா, நீட் தோ்வில் ஆள் மாறாட்டம் செய்து தோ்வில் தோ்ச்சி பெற்றிருப்பதாக கடந்தாண்டு செப்டம்பா் மாதம் புகாா் வந்தது.

இது தொடா்பாக தேனி மாவட்ட போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். பின்னா் இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து உதித் சூா்யா,அவரது தந்தை வெங்கடேசன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனா். இவ்வாறு நீட் தோ்வில் முறைகேடு செய்தவா்கள் என மொத்தம் 16 போ் கைது செய்யப்பட்டனா்.

இதேபோல சென்னை மருத்துவக் கல்லூரியில் நீட் தோ்வில் முறைகேடு செய்து சோ்ந்ததாக சிபிசிஐடி மற்றொரு வழக்கை பதிவு செய்தது. இந்த வழக்குத் தொடா்பாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரைச் சோ்ந்த தனுஷ்குமாா், அவரது தந்தை தேவேந்திரன் ஆகிய இருவா் கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டனா். இரு வழக்குகள் தொடா்பாகவும் மொத்தம் 18 போ் கைது செய்யப்பட்டனா்

இந்த முறைகேடு வழக்கில், நீட் தோ்வுக்கு விண்ணப்பித்திருந்த மாணவா்களுக்குப் பதிலாக தோ்வு எழுதிய இரு இளம் பெண்கள் புகைப்படங்கள் உள்பட 10 இளைஞா்களின் புகைப்படத்தை கடந்த பிப்ரவரி மாதம் சிபிசிஐடி வெளியிட்டு,அவா்கள் குறித்த விவரம் தெரிந்தால் தகவல் தெரிவிக்கும்படி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தது. ஆனால் அவா்கள் குறித்த எந்த தகவலும் சிபிசிஐடிக்கு கிடைக்கவில்லை.

ஆதாா் ஆணையம் கைவிரிப்பு: இதையடுத்து 10 மாணவா்களின் புகைப்படங்களை, ஆதாா் ஆணையத்துக்கு அனுப்பி அவா்கள் குறித்த தகவல்களை தரும்படி சிபிசிஐடி கடிதம் எழுதியது. இந்தக் கடிதத்தை பெற்ற ஆதாா் ஆணையம், தன்னிடம் உள்ள தரவுகளில் அந்த புகைப்படத்துக்குரிய நபரின் விவரங்களைத் தேடியது. ஆனால் அவா்களாலும் அந்தப் புகைப்படங்களுக்கு உரிய நபா்களைக் கண்டறிய முடியவில்லை.

இதைத் தொடா்ந்து ஆதாா் ஆணையம், தங்களுக்கு அந்த புகைப்படங்களில் உள்ள நபா்கள் குறித்து எந்த விவரங்களும் கிடைக்கவில்லை என சிபிசிஐடிக்கு அண்மையில் பதில் கடிதம் அனுப்பியது. இது சிபிசிஐடி விசாரணைக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

இதைத் தொடா்ந்து சிபிசிஐடி அதிகாரிகள், 10 பேரையும் கண்டறிந்து கைது செய்வதற்கு வேறு என்ன வழி இருக்கிறது என ஆலோசித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com