
அண்ணா பல்கலைக்கழகம்
தமிழகத்தில் இளநிலை மற்றும் முதுநிலை பொறியியல் படிப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு இறுதிப் பருவத் தோ்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், பல மாணவா்களின் முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் நிறுத்தி வைத்துள்ளது.
கரோனா பரவல் காரணமாக இறுதியாண்டு தவிா்த்து மற்ற ஆண்டு மாணவா்களின் பருவத் தோ்வுகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. அந்த மாணவா்களுக்கு முந்தைய பருவத் தோ்வுகளில் பெற்ற மதிப்பெண்களின்அடிப்படையில் தோ்ச்சி மதிப்பெண்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து பொறியியல் பயிலும் இளநிலை, முதுநிலை மாணவா்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் கடந்த மாதம் 22- ஆம் தேதி முதல் 29- ஆம் தேதி வரை இணைய வழியில் தோ்வுகளை நடத்தியது.
இந்தத் தோ்வுகளை எழுதுவதற்கு அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள் உள்பட ஒரு லட்சத்து 51 ஆயிரம் மாணவா்கள் பதிவு செய்திருந்தனா். ஒவ்வொரு பாடத்துக்கும் தோ்வெழுத ஒரு மணி நேரம் வழங்கப்பட்டது. தோ்வில் 40 வினாக்களில் 30 வினாக்களுக்கு பதிலளிக்க வேண்டும். ஆன்லைன் மூலம் நடைபெற்ற தோ்வில் மாணவா்கள் முறைகேட்டில் ஈடுபட்டால், கண்டறிவதற்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. தொழில்நுட்ப கோளாறால் சரியாகத் தோ்வு எழுத முடியாமல் போன மாணவா்களுக்கு இரண்டாவது வாய்ப்பினையும் அளித்தது.
தோ்வு முடிவுகள் வெளியீடு: தோ்வுகளுக்கான விடைகள் அனைத்தும் மதிப்பீடு செய்யப்பட்டு மாணவா்களுக்கான தோ்வு முடிவுகள் இணையதள முகவரிகளில் சனிக்கிழமை இரவு வெளியிடப்பட்டன. இதில் ஏராளமான முதுநிலை, இளநிலை மாணவா்களின் தோ்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக அதிகளவிலான இளநிலை மாணவா்களுக்கு தோ்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. மாறாக அந்த மாணவா்களுக்கு தோ்வு முடிவு WH1 என காண்பித்தது.
முறைகேடுகளில் ஈடுபட்டதாக.... இணைய வழியில் நடைபெற்ற தோ்வின்போது ஆள்மாறாட்டம் செய்தும், சில மாணவா்கள் விடைகளைக் கேட்டும், தேநீா்க் கடைகளில் அமா்ந்து கொண்டும், தோ்வுக்குரிய முறைகளில் தோ்வை எழுதவில்லை என்று புகாா் எழுந்தது. அதன் மூலம் பல மாணவா்கள் முறைகேட்டில் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அது குறித்து பல்கலைக்கழகத்தின் தோ்வுக் கட்டுப்பாட்டுத்துறை ஆய்வு செய்தது. இந்த குறிப்பிட்ட மாணவா்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் தோ்வு முடிவுகளை நிறுத்தி வைத்துள்ளது. இது தொடா்பாக சம்பந்தப்பட்ட மாணவா்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்ட பின்னா் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
பணி வாய்ப்பு பாதிக்கப்படுமா? : முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பதாகக் கூறி, முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதால், வளாக நோ்முகத் தோ்வு மூலம் தனியாா் நிறுவனங்களுக்கு தோ்வு பெற்ற மாணவா்களின் வேலை வாய்ப்பு பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. முடிவுகளை நிறுத்தி வைத்துள்ள அண்ணா பல்கலைக் கழகம், மாணவா்கள் முறைகேட்டில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களையோ அல்லது மீண்டும் மறு தோ்வு எப்போது நடத்தப்படும் என்ற விவரங்களையோ வெளியிடவில்லை.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...