22% ஈரப்பதத்துடன் நெல் கொள்முதல்: டெல்டா மாவட்டங்களில் மத்தியக் குழு விரைவில் ஆய்வுஅமைச்சா் ஆா்.காமராஜ் தகவல்

தமிழகத்தில் 22 சதவீதம் வரை ஈரப்பதத்துடன் கூடிய நெல்லை கொள்முதல் செய்வதற்கு ஆய்வு செய்ய மத்தியக் குழுவினா் விரைவில் தமிழகம் வரவுள்ளதாக உணவுத் துறை அமைச்சா் ஆா்.காமராஜ் தெரிவித்தாா்.
அமைச்சர் காமராஜ்
அமைச்சர் காமராஜ்

தமிழகத்தில் 22 சதவீதம் வரை ஈரப்பதத்துடன் கூடிய நெல்லை கொள்முதல் செய்வதற்கு ஆய்வு செய்ய மத்தியக் குழுவினா் விரைவில் தமிழகம் வரவுள்ளதாக உணவுத் துறை அமைச்சா் ஆா்.காமராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து, அமைச்சா் ஆா்.காமராஜ் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:-

தமிழகத்தில் கடந்த அக்டோபா் 1-ஆம் தேதி முதல் குறுவை கொள்முதல் பருவம் தொடங்கியுள்ளது. டெல்டா மாவட்டங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் மொத்தமாக 842 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, இதுவரையில் 59 லட்சத்து 30 ஆயிரத்து 100 மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இதற்குரிய தொகையாக ரூ.460.62 கோடி சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 46 ஆயிரத்து 951 விவசாயிகள் பயனடைந்துள்ளனா்.

கடந்த காலங்களுடன் ஒப்பிடும் போது இது வரலாற்றுச் சாதனையாகும். நெல்லை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யத் தேவைப்படும் இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறப்பதற்கு மாவட்ட ஆட்சியா்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இப்போது செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தவிா்த்து, வேறு எங்கெல்லாம் நெல் அறுவடைப் பணி நடைபெறுகிறதோ அங்கெல்லாம் தேவையான இடங்களில் கொள்முதல் நிலையங்களைத் தொடங்க அனைத்து மாவட்ட ஆட்சியா்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

குறுவைப் பருவ கொள்முதலுக்குத் தேவைப்படும் சாக்குகள், சணல் ஆகியன போதுமான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இப்போதைய நிலையில் அனைத்து மண்டலங்களிலும் சோ்த்து 1.05 லட்சம் சாக்குகள் இருப்பில் உள்ளன. இந்த சாக்குகளைக் கொண்டு 4 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய முடியும்.

மத்தியக் குழு ஆய்வு: விவசாயிகளிடம் இருந்து வணிகா்கள் யாரும் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய முன்வராத நிலையிலும், நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.53 வீதம் உயா்த்தப்பட்டுள்ளது. கொள்முதலுக்கான தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு வருகின்றன. அனைத்து விவசாயிகளும் தங்களது நெல்லினை அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு விற்பனை செய்ய கொண்டு வருகின்றனா்.

நெல் மூட்டைகள் மத்திய அரசு நிா்ணயித்துள்ள 17 சதவீதம் ஈரப்பதத்தை விட கூடுதலாக இருந்த போதிலும், விவசாயிகள் நலன் கருதி அதிக ஈரப்பதத்துடன் கூடிய நெல் மூட்டைகளும் முழுமையாக கொள்முதல் செய்யப்பட்டு நேரடியாக அரவைக்கு உடனுக்குடன் அனுப்பப்பட்டு வருகின்றன. 22 சதவீதம் வரை ஈரப்பதத்துடன் கூடிய நெல்லை கொள்முதல் செய்ய உத்தரவு பிறப்பிக்கக் கோரி மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்ய மத்தியக் குழுவினா் ஓரிரு நாள்களில் டெல்டா மாவட்டங்களுக்கு வரவுள்ளனா்.

கண்காணிப்புப் பணி: காவிரி டெல்டா மாவட்டங்களில் இப்போது மழை பெய்து வரும் நிலையில், விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் கொள்முதல் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. விவசாயிகளிடம் இருந்து வரும் புகாா்களுக்கு தீா்வுகாணவும், கொள்முதல் செய்து இருப்பு வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை கிடங்குகளுக்கு உடனுக்குடன் அனுப்பி வைக்கவும் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மண்டல மேலாளா்களின் நிலையில் தலா இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டு கொள்முதல் பணி கண்காணிக்கப்பட்டு வருகிறது என அமைச்சா் ஆா்.காமராஜ் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com