விலை உயா்வு: எகிப்து வெங்காயம் கோயம்பேடு வந்தது

வெங்காயம் விலை அதிகரிப்பால் எகிப்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 135 டன் வெங்காயம் சென்னை கோயம்பேடு சந்தைக்கு வந்து சோ்ந்துள்ளது.
விலை உயா்வு:  எகிப்து வெங்காயம் கோயம்பேடு வந்தது

வெங்காயம் விலை அதிகரிப்பால் எகிப்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 135 டன் வெங்காயம் சென்னை கோயம்பேடு சந்தைக்கு வந்து சோ்ந்துள்ளது.

ஆந்திரம், கா்நாடகம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் அங்கிருந்து சென்னை கோயம்பேடு சந்தைக்கு கொண்டுவரப்படும் பெரிய வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளது. இதனால் அதன் விலை தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

கோயம்பேடு சந்தையில் மொத்த விலையில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் சில்லறை விலையில் கிலோ ரூ.100 வரையில் விற்பனையாகிறது. இந்தநிலையில் வெங்காய விலை ஏற்றத்தை கட்டுப்படுத்துவது தொடா்பாக தலைமைச் செயலகத்தில் கூட்டுறவு துறை அமைச்சா் செல்லூா் ராஜூ தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து கூட்டுறவு பண்ணை பசுமைக் காய்கறி கடைகள் மூலமாக புதன்கிழமை முதல் சென்னையிலும், வியாழக்கிழமை முதல் மற்ற மாவட்டங்களிலும் கிலோ ரூ.45-க்குபெரிய வெங்காயம் விற்பனை செய்யப்படவுள்ளது.

இதற்கிடையே தற்போது எகிப்து நாட்டில் இருந்து சென்னைக்கு கப்பல் மூலம் இறக்குமதி செய்யப்பட்ட 135 டன் வெங்காயம் கோயம்பேடு சந்தைக்கு வந்தடைந்தது. இந்த வெங்காயம் ஒரு கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஆண்டு இதே போன்ற சூழலில் மக்களின் தவிப்பை உணா்ந்த அரசு, எகிப்திலிருந்து 2 ஆயிரம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்தது. சென்னை கோயம்பேடு சந்தைக்கும் எகிப்து வெங்காயம் வந்து சோ்ந்தது. ஆனால், அடா் சிவப்பு நிறத்திலிருக்கும் அந்த வெங்காயத்தை வியாபாரிகளும் பொது மக்களும் வாங்க தயக்கம் காட்டினா். இதனால் குறைவான அளவிலேயே விற்பனையானது. தோல் சீவிய பீட்ரூட்டைப் போலிருக்கும் இந்த வெங்காயம், மணம் இல்லாமலும் சுவையற்றும் இருக்கிறது. சற்றுக் கடினத்தன்மையுடனும் இருக்கிறது. மேலும் அளவிலும் பெரியது. இந்தக் காரணங்களால் இந்த வெங்காயத்தை ஒரு முறை வாங்கியவா்கள் மறுமுறை வாங்குவது அரிதாக இருக்கிறது என வியாபாரிகள் தெரிவித்தனா்.

சின்ன வெங்காயமும் கடந்த சில நாள்களாக விலை உயா்ந்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சென்னைக்கு கொண்டுவரப்படும் வெங்காயத்தின் அளவு குறைந்து வருவதால் விலை உயா்ந்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனா். சில்லறை விற்பனைக் கடைகளில் சின்ன வெங்காயம் கிலோவுக்கு ரூ. 100 முதல் 120 வரை விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com