விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆலோசகரை கொல்ல முயன்ற விவகாரம்: வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு

விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகரான பாலசிங்கத்தை குண்டுவெடிப்பு நிகழ்த்தி கொல்ல முயன்ற வி.கே.டி.பாலன் மீதான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
உயர்நீதிமன்றம்
உயர்நீதிமன்றம்

சென்னை: விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகரான பாலசிங்கத்தை குண்டுவெடிப்பு நிகழ்த்தி கொல்ல முயன்ற வி.கே.டி.பாலன் மீதான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகர் பாலசிங்கத்தை கொலை செய்யும் நோக்குடன், கடந்த 1985ம் ஆண்டு சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரது வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டது. இந்த குண்டுவெடிப்பில் எவரும் காயமடையவில்லை.

இந்த சம்பவம் தொடர்பாக கந்தசாமி, வி.கே.டி.பாலன், ரஞ்சன், மணவை தம்பி, பவானி, பிரேம்குமார், ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக சிபிசிஐடி போலீஸார்  வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கந்தசாமி மற்றும் பிரேம்குமார் ஆகியோர் தலைமறைவாகினர். ரஞ்சன், மணைவை தம்பி ஆகியோர் இறந்து விட்டனர். ராதாகிருஷ்ணன் அரசு தரப்பு சாட்சியாக மாறிவிட்டார். வி.கே.டி பாலன் மட்டும் வழக்கை எதிர் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் கடந்த 30 ஆண்டுகளாக இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் காணாமல் போய்விட்டன. இந்த வழக்கில் தொடர்புடைய பாலசிங்கம் உள்ளிட்ட  பல முக்கிய சாட்சிகள் இறந்து விட்டதால் தனக்கு எதிரான இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என வி.கே.டி. பாலன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், அரசுத் தரப்பு சாட்சியாக மாறியவர் உள்ளிட்ட சில சாட்சிகள் உயிருடன் உள்ளனர். குற்றம்சாட்டப்பட்டவர்கள் சிலர் இறந்ததாலும், தலைமறைவாக உள்ளதாலும் வழக்கை ரத்து செய்ய முடியாது என வாதிடப்பட்டது.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, பாலசிங்கம் இறந்துவிட்டார் என்பதற்காக இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது. உயிருடன் இருக்கும் பிற சாட்சிகள் மூலமாக வழக்கை நிரூபிக்க முடியும் என தெரிவித்தார். மேலும், நீண்ட காலதாமதம், ஆவணங்கள் காணமல் போனது ஆகியவை வழக்கை ரத்து செய்வதற்கு உரிய காரணமாக கூற முடியாது. எனவே, இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை  அமர்வு நீதிமன்ற விசாரணைக்கு அனுப்பும் நடைமுறையை 3 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என குற்றவியல் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டார். ஆவணங்களை பெற்ற அமர்வு நீதிமன்றம்  சட்டப்படி விசாரணை நடைமுறைகளை தொடங்க உத்தரவிட்டு, வழக்கை ரத்து செய்ய கோரிய வி.கே.டி. பாலனின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com