'முதல்வராக பழனிசாமி பொறுப்பேற்ற பின்பு தான் நீட் தேர்வு நடத்தப்படுகிறது'

முதல்வராக பழனிசாமி பொறுப்பேற்ற பின்பு தான் தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
மு.க.ஸ்டாலின்.
மு.க.ஸ்டாலின்.

முதல்வராக பழனிசாமி பொறுப்பேற்ற பின்பு தான் தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், கரோனாவை கட்டுப்படுத்தியதால் பழனிசாமிக்குத் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் நற்பெயர் ஏற்பட்டுள்ளதாம்; அதனைப் பார்த்து நான் காழ்ப்புணர்ச்சி அடைந்துள்ளேனாம். அவருக்கு என்ன நற்பெயர் ஏற்பட்டுள்ளது என்பதை ஏதாவது ஒரு ஊரில் தனியாக நடந்து போய் மக்கள் மத்தியில் துணிச்சலாகக் கேட்கட்டும். அந்தப் பெயர் நாற்றமெடுப்பதாகவே இருக்கும். நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களது கோபத்துக்கும் ஆளாகி, மிக மோசமான பின்னடைவைச் சந்தித்துள்ளார் பழனிசாமி. இதனை மறைத்து, நற்பெயர் என்று அவர் சொல்லிக் கொள்வது, உப்புக் கல்லை வைரம் என்று சொல்லும் பேதைமை; அறிந்தே, மனசாட்சியை மறைத்தே, தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டு, பிறரையும் ஏமாற்றுவதற்குச் சமம்.

தடுப்பூசி இலவசமாகப் போடப்படும் என்று அவர் சொன்னதால் மக்கள் ஆதரவு அவருக்குப் பெருகி வருவதாக அவரே சொல்லிக் கொள்கிறார்; அல்லது அப்படி அவர் நம்ப வைக்கப்பட்டுள்ளார். ஓர் அரசாங்கம், மக்களிடமிருந்து ஈட்டும் வருவாயைப் பயன்படுத்தி, மக்களுக்கு அடிப்படையாகச்  செய்ய வேண்டிய கடமையை, ஏதோ கருணையாக நினைத்துக் கொள்வது, மனிதாபிமானமற்ற செயல் என்பது அவருக்கு இன்னுமா புரியவில்லை? வெள்ளத்தில் மிதக்கும் மக்களுக்கு உணவுப்பொட்டலம் போடுவதை, 'விலையில்லா உணவுப்பொட்டலம்' என்று சொல்வது எத்தகைய கொடூரமோ, அத்தகைய கொடூரம் தான் கொரோனா தடுப்பூசி இலவசமாகப் போடப்படும் என்பதும்.

துளியும் இரக்கமற்ற தன்மையின் வெளிப்பாடு இது என்பதை நினைத்து, தமிழ்நாட்டு மக்கள், தமது தவப்பயனை (?) எண்ணித் தலையில் அடித்துக் கொள்கிறார்கள்! தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தப்படுவது, பழனிசாமி முதலமைச்சராகப் பொறுப்பேற்றதற்குப் பிறகுதான் என்பதை ஏனோ மறந்துவிட்டு, நீட் தேர்வு குறித்து என்னென்னவோ சம்பந்தமில்லாதவற்றைக் கூறியிருக்கிறார். பழனிசாமி, அருகதையைப் பற்றி, தனது அறிக்கையில் அளந்து விட்டிருக்கிறார். இவர் தன்னுடைய அருகதையை - யோக்கியதையைத் தமிழக மக்களுக்கு நிரூபிக்க வேண்டுமானால், நாளையே அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு ஆளுநரின் அனுமதியைப் பெறட்டும்! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com