அனைவருக்கும் கரோனா தடுப்பூசி இலவசம்: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி

கரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டவுடன் தமிழக மக்கள் அனைவருக்கும் இலவசமாகப் போடப்படும் என முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை பேசுகிறார் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி. உடன், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர்,  உணவுத் துறை அமைச்சர் காமராஜ் உள்ளிட்டோர்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை பேசுகிறார் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி. உடன், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர்,  உணவுத் துறை அமைச்சர் காமராஜ் உள்ளிட்டோர்.

புதுக்கோட்டை: கரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டவுடன் தமிழக மக்கள் அனைவருக்கும் இலவசமாகப் போடப்படும் என முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடக்க விழா மற்றும் கரோனா தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்துக்குப் பிறகு, அவர் அளித்த பேட்டி: 

2015-இல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா நடத்திய உலகத் தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி தற்போது விராலிமலையில் ரூ. 1,150 கோடியில் ஐடிசி உணவு உற்பத்தி நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. இதே நிறுவனத்தின் இன்னொரு பகுதி, வரும் பிப்ரவரியில் தொடங்கப்படும்.

அதன் பிறகு, 2019-இல் நடத்தப்பட்ட உலகத் தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் 211 தொழில்களுக்கு ரூ. 303 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. அவற்றில் 184 திட்டங்கள் ரூ. 197 கோடி முதலீட்டில்  தொடங்கப்பட்டுள்ளன. இவற்றால் பல்லாயிரக்கணக்கானோருக்கு வேலை கிடைத்துள்ளது. ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வேண்டுமென்றே, அரசைக் குறை கூற வேண்டும் என்பதற்காக, தொடர்ந்து பொய்ப் பிரசாரத்தை ஊடகங்கள் வாயிலாக செய்து வருகிறார்.

38 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: குடிமராமத்துத் திட்டத்தால் நிலத்தடி நீர் உயர்ந்து, வேளாண் உற்பத்தி அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் மூலம் 23 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் , நிகழாண்டில் 38 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கல்லணைக் கால்வாய் சீரமைப்புக்காக சுமார் ரூ.2,600 கோடியில் விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு மத்திய அரசிடம் அனுமதி பெறுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

விரைவில் அரசு பல் மருத்துவக் கல்லூரி: புதுக்கோட்டையில் புதிதாக அரசு பல் மருத்துவக் கல்லூரி விரைவில் தொடங்கப்படும். மேலும், புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் புதிய கூட்டுக் குடிநீர் மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ.510 கோடியில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

திருவப்பூர் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணியும், கருவேப்பிலான் கேட் பகுதியில் ஒரு மேம்பாலம் கட்டும் பணியும் விரைவில் தொடங்கப்படும். 

புதுக்கோட்டை மாவட்டத்தின் கனவுத் திட்டமான காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டத்தைத் தொடங்கி வைக்க, வரும் ஜனவரி மாதம் மீண்டும் புதுக்கோட்டை வருவேன் என்றார் எடப்பாடி கே. பழனிசாமி.

முன்னதாக, ஆட்சியரகத்தில் நடைபெற்ற கரோனா தடுப்புப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில், அமைச்சர் சி. விஜயபாஸ்கர், ஆட்சியர் பி. உமா மகேஸ்வரி உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்களும் பங்கேற்றனர்.

தொடர்ந்து மாவட்டத்தின் முக்கியப் பிரமுகர்கள், சேவை அமைப்பினர், விவசாயசி சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களையும் தமிழக முதல்வர் தனித்தனியே சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com