கரோனாவால் உயிரிழந்த செவிலியரின் மகளுக்கு அரசு வேலை வழங்கக் கோரி வழக்கு: மனுவை பரிசீலிக்க உத்தரவு

கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த செவிலியரின் மகளுக்கு அரசு வேலை வழங்கக் கோரிய விண்ணப்பத்தை  4 வாரங்களில் பரிசிலிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த செவிலியரின் மகளுக்கு அரசு வேலை வழங்கக் கோரிய விண்ணப்பத்தை  4 வாரங்களில் பரிசிலிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றியவர் தங்கலட்சுமி. கரோனா நோய்த்தொற்று சிகிச்சை பணியில் முன்கள பணியாளராக ஈடுபட்ட அவர்,  கடந்த ஜூன் மாதம் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். 

கரோனா நோய்த்தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன்கள பணியாளர்கள், தொற்று பாதித்து உயிரிழந்தால், ரூ. 50 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். அதன்படி, தனது மகளுக்கு அரசு வேலை வழங்கக் கோரி தங்கலட்சுமியின் கணவர் அருணாச்சலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், ஏற்கனவே காப்பீட்டு நிறுவனம் மூலம் ரூ.50 லட்சம் இழப்பீடு பெற்று விட்டதாகவும், வேலையில்லாமல் உள்ள தனது இளைய மகளுக்கு அரசு வேலை வழங்கக் கோரி விண்ணப்பித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி சி.சரவணன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத்தரப்பில் மனுதாரரின்  கோரிக்கை அரசின் பரிசீலனையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, மனுதாரரின் விண்ணப்பத்தை 4 வாரங்களில் பரிசீலித்து முடிவு எடுக்க  தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com