பாமக தலைவர் ராமதாஸ்  (கோப்புப்படம்)
பாமக தலைவர் ராமதாஸ் (கோப்புப்படம்)

சென்னைக்கு ஆபத்து: 'குப்பை எரிஉலை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும்'

சென்னைக்கு ஆபத்தை விளைவிக்கும் எரிஉலை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று பாமக தலைவர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

சென்னைக்கு ஆபத்தை விளைவிக்கும் எரிஉலை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று பாமக தலைவர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ''சென்னை மாநகராட்சியில் மயிலாப்பூர், அம்பத்தூர், பள்ளிக்கரணை, கொடுங்கையூர், சாத்தாங்காடு, அயனாவரம் ஆகிய 6 இடங்களிலும், புறநகரில் தாம்பரத்தில் இரு இடங்கள், சிட்லப்பாக்கத்தில் ஓரிடம்  என மொத்தம் 9 இடங்களில் குப்பை எரிஉலைகளை அமைக்க முடிவு செய்துள்ள தமிழக அரசு, அவற்றுக்கான ஒப்பந்தப்புள்ளிகளையும் கோரியிருக்கிறது. மனித நலனுக்கு எதிரான இத் திட்டம் கண்டிக்கத்தக்கது.

சென்னையிலும், புறநகர் பகுதிகளிலும் அமைக்கப்படவுள்ள 9 எரிஉலைகளிலும் தலா 100 டன்கள் வீதம் தினமும் 900 டன்கள் குப்பைகள் எரித்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படவிருக்கிறது.

குப்பையில்  இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் என்ற புரட்சிகரமானது என்றாலும், இத்திட்டத்தால் கிடைக்கும் பயன்கள் மிக மிகக் குறைவு ஆகும்.  

புறநகர் பகுதிகளிலும் ஒரு நாளைக்கு 900 டன் குப்பைகள் எரிக்கப்பட்டால் மிகப் பெரிய சுற்றுச்சூழல் சீரழிவுகள் ஏற்படும். எரிஉலைகளில் எரிக்கப்படும் குப்பைகளிலிருந்து  டையாக்சின், சல்பர் டையாக்சைடு, கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் டையாக்சைடு, பாதரசம், கரியமில வாயு  உள்ளிட்ட வாயுக்களும், காற்றில் மிதக்கும் நச்சுத் துகள்கள், ஆவியாகும் கரிமச் சேர்மங்கள் ஆகியவையும் வெளியாகும். 

இவற்றில் பெரும்பான்மையான வேதிப்பொருட்கள் நச்சுத்தன்மை கொண்டவை. காற்றில்  அழையாமல் நிலைத்திருக்கும் இவை மனித உடலுக்குள் சென்றாலும் கூட அழியாமல் நிலைத்திருக்கும்.

இவ்வளவு மோசமான ஆபத்துகளையும், பாதிப்புகளையும் ஏற்படுத்தக்கூடிய எரிஉலைகளில் இருந்து குறிப்பிடத்தக்க அளவில் மின்சாரமாவது உற்பத்தி செய்ய முடியுமா? என்றால் அதுவும் இல்லை

எந்த நன்மையும் செய்யாத, காற்று மாசு, உடல்நலக் கேடு, புவிவெப்பமயமாதலுக்குக் காரணமான வாயுக்களை வெளியேற்றுதல், பொருளாதார இழப்பு என பல கேடுகளுக்கு வழிவகுக்கும் குப்பை எரிஉலைகளை சென்னையில் அமைப்பது தற்கொலைக்கு சமமான முடிவு ஆகும். 

எனவே, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 9 குப்பை எரிஉலைகளை அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். அத்துடன், மத்திய அரசின் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016 உள்ளிட்ட குப்பை மேலாண்மைக்கான விதிகளை முழுமையாக பின்பற்றி குப்பை பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்'' என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com