ஸ்டாலினை கொச்சைப்படுத்தி சுவரொட்டி: துரைமுருகன் கண்டனம்

திமுக தலைவர் ஸ்டாலினை கொச்சைப்படுத்தி சுவரொட்டி ஒட்டப்பட்டதற்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன்
திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன்

திமுக தலைவர் ஸ்டாலினை கொச்சைப்படுத்தி சுவரொட்டி ஒட்டப்பட்டதற்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், அ.தி.மு.க. ஆட்சியின் சாதனைகளைச் சொல்ல முடியாமல் திணறி - திண்டாடிக் கொண்டிருக்கும் முதல்வர் பழனிசாமி, இன்றைக்கு எங்கள் கழகத் தலைவர் தளபதி குறித்துத் தரக்குறைவான சுவரொட்டிகளை ஒட்டி அநாகரிக அரசியல் செய்வதற்குத் தூபம் போடுவதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அ.தி.மு.க.வினரால் நேற்றைய தினம் ஒட்டப்பட்ட அனாமதேய சுவரொட்டிகளால் கோயம்புத்தூர் உள்ளிட்ட பல பகுதிகளில் கழகத் தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததன் விளைவாக “ஒட்டியவர்களே” சில இடங்களில் சுவரொட்டிகளைக் கிழித்துள்ளார்கள். பல இடங்களில் காவல்துறை நண்பர்கள் கிழித்துப் போட்டிருக்கிறார்கள். ஆனால் கோயம்புத்தூரில் உள்ள காவல்துறையினர் மட்டும் அமைச்சர் “எஸ்.பி. வேலுமணியின்” எடுபிடிகளாக இருக்கிறார்கள் என்பது வேதனைக்குரியது. 

கோவை, குனியமுத்தூர் பகுதியில் மட்டும் இதுபோன்ற சுவரொட்டிகளை - அ.தி.மு.க.வினரும் கிழிக்காமல் காவல்துறையினரும் கிழிக்காமல் வேடிக்கை பார்த்ததால் - கழகத் தொண்டர்களே ஆவேசப்பட்டுப் போராடியிருக்கிறார்கள்.  அப்படி “பெயர் போடாமல்” “அநாகரிகமாக” எங்கள் கழகத் தலைவர் குறித்து சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் புகார் கொடுத்த தி.மு.க.வினர் மீதே வழக்குப் போட்டு கைது செய்து காவல் நிலையத்தில் வைத்திருக்கிறது அங்குள்ள காவல்துறை. இந்த அபத்தமான நடவடிக்கையை - அராஜகமான நடவடிக்கையை குனியமுத்தூர் காவல் நிலைய அதிகாரி செய்திருக்கிறார்; அப்படிப் பொய் வழக்குப் போடுவதற்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவிட்டிருக்கிறார் என்பது சட்டவிரோதமானது. 

எஞ்சியிருக்கின்ற ஆறு மாதங்களில் அந்த அமைச்சர் உள்ளாட்சித்துறையை மட்டுமல்ல; காவல் துறையையும் குட்டிச்சுவராக்கி விடுவார் போலிருக்கிறது. எங்கள் கழகத் தலைவரைக் கொச்சைப்படுத்தி  சுவரொட்டி ஒட்டுவதை - அதுவும் பெயர் போடாமல் சுவரொட்டி அடித்து ஒட்டுவதை எங்கள் கழகத் தொண்டர்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் .ஆகவே இதுபோன்று தரக்குறைவான சுவரொட்டிகளை ஒட்டியவர்கள் மீது தி.மு.க.வினர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் , கழகத்தினர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்றும்  கேட்டுக்கொள்கிறேன். அவ்வாறு போஸ்டர் ஒட்டியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யாவிட்டால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்க விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com