மணப்பாறை குப்பைக் கிடங்கில் தீ விபத்து

மணப்பாறையில் குப்பைக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தீயை அணைக்க போராடும் தீயணைப்புத்துறை வீரர்கள்.
தீயை அணைக்க போராடும் தீயணைப்புத்துறை வீரர்கள்.

மணப்பாறையில் குப்பைக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த விராலிமலை சாலை வாகைக்குளம் பகுதியில் சமீப காலமாக நகராட்சி நிர்வாகம் மூலம் அங்கீகாரமற்ற நிலையில் குப்பைக் கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதில் சுற்றுவட்டாரப் பகுதி குடியிருப்புக் குப்பைகள் மட்டுமின்றி, அருகாமையில் உள்ள பகுதிகளிலிருந்தும் குப்பைகள் சேகரிக்கப்பட்டுக் கொட்டி வைக்கப்படுகிறது. அவ்வாறு கொட்டி வைக்கப்படும் குப்பைகளை நகராட்சி நிர்வாகம் முறையாக அப்புறப்படுத்துவதுமில்லை. 

இதனால் அப்பகுதியினை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் மூக்கை பிடித்தவாறு தான் செல்ல முடியும் என்ற நிலை உள்ளது. இதில் கூடுதலாக அவ்வப்போது குப்பைகளில் ஏற்படும் தீ விபத்து அப்பகுதி குடியிருப்புவாசிகளின் சுகாதாரத்தைக் கேள்விக்குறியாக்கி வருகிறது.

வழக்கம்போல் பிற்பகலில் குப்பை தீ விபத்து ஏற்பட்டு, அந்த தீ அருகிலிருந்த கருவேலம் செடிகளிலும் மளமளவெனப் பரவியது. இதனால் ஏற்பட்ட புகை மண்டலம் வாகன ஓட்டிகளுக்கு எதிரே வரும் வாகனங்களை அடையாளம் காண முடியாத வகையிலும், கண் எரிச்சல் ஏற்படுத்தி வாகனம் இயக்குவதில் சிக்கலையும் ஏற்படுத்தி, அருகில் உள்ள குடியிருப்பு பகுதி, தனியார் மருத்துவமனை, பல்பொருள் அங்காடி என அனைத்து பகுதியிலும் பரவிய புகை மண்டலத்தால் கண் எரிச்சல், மூச்சுத் திணறல் எனப் பொதுமக்களும் அவதியுற்றனர்.

பொதுமக்கள் அளித்த தகவலின் பெயரில் நிகழ் விடத்துக்கு வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் சுமார் 2 மணி நேரத் தீயுடன் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த குப்பைக் கிடங்கில் அடிக்கடி ஏற்படும் தீ விபத்தினை குறித்து எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் நகராட்சி நிர்வாகம் அலட்சியப்போக்குடன் செயல்படுவதாகவும், தீ விபத்து குறித்து தகவல் அளித்து நிகழ்விடத்துக்கு வரக் கூட நகராட்சி அதிகாரிகள் தயக்கம் காட்டுகின்றனர் எனவும் பொதுமக்கள் புகார்களை முன் வைக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com