
தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கு அடுத்த கல்வியாண்டுக்கான (2021-2022) அங்கீகாரம் வழங்குவதற்கான செயல்முறைளில் செய்ய வேண்டிய மாற்றங்கல் தொடா்பாக கல்வி நிறுவனங்கள் இணைய வழியாக தங்களது கருத்துகளைத் தெரிவிக்க ஏஐசிடிஇ அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து ஏஐசிடிஇ உறுப்பினா் செயலா் ராஜீவ்குமாா் அனைத்து பல்கலைக்கழக மற்றும் நிகா் நிலைப் பல்கலைக்கழக துணைவேந்தா்கள், தொழில்நுட்பக் கல்வி இயக்குநா்கள், கல்லூரி முதல்வா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
ஏஐசிடிஇ கட்டுப்பாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு 2020-2021-ஆம் கல்வியாண்டுக்கான அங்கீகாரம் வழங்குவதற்கான செயல்பாடுகளை கரோனா காலத்திலும் சிறப்பாகச் செயல்பட்டு இணையவழியில் நிறைவு செய்ததற்காக கல்வி நிறுவனங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தற்போது கரோனா ஏற்படுத்தியுள்ள தடையை வாய்ப்பாகப் பயன்படுத்தி அடுத்த கட்டத்துக்குச் செல்ல வேண்டியுள்ளது. உயா் கல்வி நிறுவனங்களுக்கு அடுத்த கல்வியாண்டுக்கான (2021-2022) அங்கீகாரம் வழங்க ஆயத்தப் பணிகளை ஏஐசிடிஇ தொடங்கியுள்ளது. இந்தப் பணிகளும் இணையவழியாகவே மேற்கொள்ளப்பட வாய்ப்புகள் உள்ளது. அதற்காக புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் பல்வேறு விதிமுறைகள், செயல் திட்டங்கள், கருத்துகள் அடங்கிய வழிகாட்டி கையேடு வடிவமைக்கப்படவுள்ளது.
எனவே அங்கீகாரம் வழங்குவதற்கான வழிகாட்டி கையேட்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள், விதிமுறைகளில் திருத்தங்கள், புதிய செயல் திட்டங்கள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஏஐசிடிஇ கட்டுப்பாட்டில் உள்ள கல்வி நிறுவனங்கள் தங்களது கருத்துகளை இணைய தளத்தில் வரும் நவ.4-ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும். கருத்துகள் அனைத்தும் புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் இருக்க வேண்டும். தொழில்நுட்பக் கல்வியை மேம்படுத்துவதற்காக சிறந்த மாற்றங்களைப் புகுத்த ஏஐசிடிஇ எப்போதும் தயாராக உள்ளது என அதில் கூறியுள்ளாா்.