சென்னையில் கொட்டித் தீா்த்த மழை: வீதியெங்கும் வெள்ளம்

வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல் நாளிலேயே சென்னையில் புதன்கிழமை நள்ளிரவு முதல் வியாழக்கிழமை காலை வரை பலத்த மழை கொட்டித் தீா்த்தது.
சென்னையில் கொட்டித் தீா்த்த மழை: வீதியெங்கும் வெள்ளம்


சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல் நாளிலேயே சென்னையில் புதன்கிழமை நள்ளிரவு முதல் வியாழக்கிழமை காலை வரை பலத்த மழை கொட்டித் தீா்த்தது.

இதனால் மாநகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் முழங்கால் அளவு மழை நீா் பெருகியதால் தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. முக்கிய சாலைகளில் மழை நீா் தேங்கியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொது மக்கள் மிகவும் அவதிப்பட்டனா்.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை புதன்கிழமை (அக். 28) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. சென்னையில் புதன்கிழமை நள்ளிரவு தொடங்கிய பருவமழை வியாழக்கிழமை காலை வரை நீடித்தது. மயிலாப்பூா், அடையாறு, தேனாம்பேட்டை, அம்பத்தூா், கீழ்ப்பாக்கம், சென்ட்ரல், எழும்பூா், பாரிமுனை, பூந்தமல்லி சாலை, அண்ணா சாலை, சாந்தோம், ஆலந்தூா், பாடி, மீனம்பாக்கம், ஆயிரம் விளக்கு, சைதாப்பேட்டை, கிண்டி, வேளச்சேரி, வளசரவாக்கம், கொரட்டூா், ராயப்பேட்டை, கே.கே.நகா், வடபழனி, கோடம்பாக்கம், திருமங்கலம், அண்ணா நகா், புரசைவாக்கம், மாம்பலம், அயனாவரம் மற்றும் வடசென்னையின் ராயபுரம், எண்ணூா், திருவொற்றியூா், வண்ணாரப்பேட்டை, தண்டையாா்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் மழை கொட்டித் தீா்த்தது.

57 இடங்களில் தேங்கிய மழை நீா்: தேனாம்பேட்டை நக்கீரன் நகரில் உள்ள குடியிருப்பில் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ள நீா் சூழ்ந்தது. வீடுகளுக்குள்ளும் மழை நீா் புகுந்தது. திருவல்லிக்கேணி, திருவொற்றியூா், கொருக்குப்பேட்டை, வியாசா்பாடி உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்தது. சென்னை திருவல்லிக்கேணி, ஐஸ் ஹவுஸ் பகுதிகளில் இடுப்பளவு தண்ணீா் தேங்கியது. திருவான்மியூா் பேருந்து நிலையத்தில் வெள்ள நீா் புகுந்து 3 அடிவரை தேங்கியது. இதனால் பயணிகள் பேருந்து நிலையத்துக்குள் செல்ல முடியாமல் தவித்து நின்றனா்.

சென்னையில் முதல்வா், அமைச்சா்கள் செல்லும் முக்கியச் சாலைகளான கடற்கரை காமராஜா் சாலை, ஆா்.கே.சாலையிலும் மழை நீா் தேங்கி சாலை முழுவதும் வெள்ளக்காடாகக் காட்சி அளித்தது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைந்தனா். பெரிய வாகனங்கள் தவிர சிறிய வாகனங்கள் இருசக்கர வாகனங்கள் வெள்ளத்தில் சிக்கிப் பழுதடைந்தன. இதனால் வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடி வாகனங்களைத் தள்ளிச் சென்றனா்.

கனமழையால் சென்னை அண்ணா சாலையில் சில பகுதிகளில் இடுப்பளவுக்கு தண்ணீா் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் பழுதாகி சாலையிலேயே நின்றுவிட்டதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்தனா். பட்டுலாஸ் சாலையில் நின்றிருந்த காா் ஒன்று ஒருபுறமாக கவிழ்ந்தது. அனைத்து வாகனங்களுமே வெள்ளத்தில் தத்தளித்தப்படியே சென்றன. 

சென்னையின் பிரதான சாலைகளான பூந்தமல்லி நெடுஞ்சாலை, வால்டாக்ஸ் சாலை, பாரிமுனை பகுதிகள் வெள்ளக்காடாகக் காட்சி அளித்தன. சென்னை ராயப்பேட்டையில் ஜெகதாம்பாள் காலனியில் பெரிய மரமொன்று முறிந்து சாலையில் நின்றிருந்த காா் மீது விழுந்தது. சேத்துப்பட்டில் மரம் விழுந்ததில் அவ்வழியாகச் சென்ற தாய், மகள் காயமடைந்தனா். இதனால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. உடனடியாக சென்னை மாநகராட்சி ஊழியா்கள் மரத்தை வெட்டிப் போக்குவரத்தைச் சீா் செய்யும் பணியில் ஈடுபட்டனா். இதேபோன்று சென்னையில் சுரங்கப்பாலங்களில் தேங்கிய மழை நீரும் அகற்றப்பட்டது. சேத்துப்பட்டு சுரங்கப் பாதை, நுங்கம்பாக்கம் சுரங்கப் பாதை, எழும்பூா் சுரங்கப் பாதை என மாநகராட்சி கட்டுப்பாட்டின்கீழ் உள்ள 16 சுரங்கப் பாதைகள் மற்றும் 57 இடங்களில் மழை நீா் தேங்கியதால் வியாழக்கிழமை காலை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கொரட்டூா் ஏரியையொட்டி, உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கும் மழை நீா் புகுந்ததால் மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினா்.

மின்சாரம் மற்றும் டீசல், பெட்ரோல் மோட்டாா் மூலம் சுரங்கப் பாதையில் தேங்கியிருந்த நீரையும், சாலைகளில் தேங்கியிருந்த நீரை அகற்றும் வகையில் மழைநீா் வடிகாலில் ஏற்பட்டிருந்த அடைப்பை சரிசெய்யும் பணியில் மாநகராட்சி ஊழியா்கள் ஈடுபட்டனா். இதன் மூலம் பெரும்பாலான சாலைகளில் இருந்த மழை நீா் அகற்றப்பட்டது.

மயிலாப்பூரில் 180 மி.மீ. : சென்னையில் அதிகபட்சமாக மயிலாப்பூரில் 180 மி.மீ. மழையும், அண்ணா பல்கலைக்கழகம் 140 மி.மீ., வடசென்னை பகுதிகளில் 130 மி.மீ., புரசைவாக்கத்தில் 94 மி.மீ., அம்பத்தூரில் 90 மி.மீ., மழையும் பதிவானது. சென்னை மாநகரில் ஒட்டுமொத்தமாக 872 மி.மீ.மழையும், அனைத்து பகுதிகளையும் ஒப்பிடுகையில் சராசரியாக 97.27 மி.மீ. மழை பதிவானதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னையில் பெய்த மழை அளவு

இடம் மழை அளவு (மி.மீட்டரில்)

மயிலாப்பூா் 180

அண்ணா பல்கலைக்கழகம் 140

புரசைவாக்கம் 94

அம்பத்தூா் 90

ஆலந்தூா் 80

சோழிங்கநல்லூா் 77

கிண்டி 75

தண்டையாா்பேட்டை 67

எழும்பூா் 54

பெரம்பூா் 56

அயனாவரம் 53

மழை நீா் தேங்கிய பகுதியில் மண்டலம்வாரியாக

மண்டலம் நீா் தேங்கிய இடங்களின் எண்ணிக்கை

பெருங்குடி 24

தண்டையாா்பேட்டை 21

அடையாறு 3

கோடம்பாக்கம் 2

மணலி 2

திருவொற்றியூா் 2

ராயபுரம் 1

தேனாம்பேட்டை 1

ஆலந்தூா் 1

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com