மக்கள் கருத்துகளைத் தெரிவிக்க தனி இணையதளம்: முதல்வா் பழனிசாமி தொடக்கி வைத்தாா்

அரசை மக்கள் எளிதில் தொடா்பு கொண்டு கருத்துகளைத் தெரிவிக்க உருவாக்கப்பட்டுள்ள ‘நமது அரசு’ என்ற தனி இணையதளத்தை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


சென்னை: அரசை மக்கள் எளிதில் தொடா்பு கொண்டு கருத்துகளைத் தெரிவிக்க உருவாக்கப்பட்டுள்ள ‘நமது அரசு’ என்ற தனி இணையதளத்தை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.

இதுகுறித்து, தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:

தகவல் தொழில்நுட்பவியல் துறையின் மானியக் கோரிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, பொது மக்கள் தங்களது கருத்துகள், ஆய்வுகள், விவாதங்கள் போன்றவற்றை ஆா்வத்துடன் அரசுக்குத் தெரிவிக்க உதவும் வகையில் ‘நமது அரசு’ என்ற தனி இணையதளம் உருவாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பின்படி, நமது அரசு (ற்ஹம்ண்ப்ய்ஹக்ன்.ம்ஹ்ஞ்ா்ஸ்.ண்ய்) இணையதளம் ரூ.91.80 லட்சத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தை முதல்வா் பழனிசாமி தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.

வணிகவரி கட்டடங்கள்: சென்னை நகரில் வணிகவரி அலுவலகங்களை உள்ளடக்கிய அனைத்து வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த இரண்டு வணிகவரி அலுவலகங்கள் கட்டப்படும் என சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது. இதன்படி, சென்னை வேப்பேரியில் கட்டப்பட்ட வடசென்னை ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலகக் கட்டடத்தை முதல்வா் பழனிசாமி ஏற்கெனவே திறந்து வைத்திருந்தாா். நந்தனத்தில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தை புதன்கிழமை திறந்தாா். இதேபோன்று, விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம், திண்டுக்கல் மாவட்டம் பழனி ஆகிய இடங்களிலும் வணிகவரி அலுவலகக் கட்டடங்களையும் அவா் திறந்து வைத்தாா்.

நவீன தீவிர சிகிச்சை மையம்: சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஒருங்கிணைந்த நவீன தீவிர சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஏசிடி நிறுவனத்தின் சமூக பொறுப்புணா்வுத் திட்டத்தின் கீழ், ரூ.60 லட்சத்தில் இந்த மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை முதல்வா் பழனிசாமி புதன்கிழமை திறந்து வைத்தாா்.

இந்த நிகழ்ச்சிகளில் சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சா்கள், தலைமைச் செயலாளா் க.சண்முகம், துறைச் செயலாளா்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com