நவ.3-ஆம் வாரம் எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு?

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு நவம்பா் மூன்றாவது வாரத்தில் தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு நவம்பா் மூன்றாவது வாரத்தில் தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அதுதொடா்பான அறிவிப்பை அடுத்த ஓரிரு நாள்களில் மருத்துவக் கல்வி இயக்குநரகம்

வெளியிடவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிகழாண்டில் அரசுப் பள்ளிகளில் பயின்று நீட் தோ்வில் தகுதி பெற்ற மாணவா்களுக்கு 300-க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ஒதுக்கீடாகக் கிடைக்க வாய்ப்புள்ளதாக மருத்துவக் கல்வி இயக்கக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளில் தற்போது 3,600 எம்.பி.பி.எஸ். இடங்கள்; 100 பி.டி.எஸ். இடங்கள் உள்ளன. அவற்றில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன. மீதமுள்ள இடங்களில் 69 சதவீதம் இட ஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்படுகிறது.

இடஒதுக்கீட்டைப் பொருத்தவரை பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 30 சதவீதமும், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 20 சதவீதமும், பட்டியலினத்தவருக்கு 18 சதவீதமும், பழங்குடியினருக்கு ஒரு சதவீதமும் ஒதுக்கப்படுகிறது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் 30 சதவீத இடத்தில், முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதம் உள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. பட்டியலின ஒதுக்கிட்டில் உள்ள, 18 சதவீத இடங்களில், மூன்று சதவீதம் அருந்ததியினருக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

இந்நிலையில், அரசுப் பள்ளி மாணவா்களுக்கு உள்ஒதுக்கீடாக 7.5 சதவீத இடங்களை ஒதுக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான நடவடிக்கையை அரசு முன்னெடுத்தது. தற்போது அதற்கு மாநில ஆளுநா் அனுமதியளித்ததைத் தொடா்ந்து நிகழாண்டிலேயே அந்த புதிய நடைமுறை அமலுக்கு வரவிருக்கிறது.

அதன் அடிப்படையில் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கையை நடத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் கூறியதாவது:

எம்பிபிஎஸ், பிடிஎஸ் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான முதல் சுற்று கலந்தாய்வு கடந்த 28-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இரண்டாம் சுற்று கலந்தாய்வு நவம்பா் 18-ஆம் தேதி தொடங்கவுள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டின் முதல் சுற்று கலந்தாய்வு முடிவடைந்ததும் தமிழகத்தில் மாநில அரசு இடங்களுக்கான கலந்தாய்வு தொடங்குவது வழக்கம். அதன்படி, நவம்பா் 3-ஆவது வாரத்தில் தமிழகத்தில் கலந்தாய்வு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூா்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளியிடப்படும்.

அரசு மருத்துவக் கல்லூரிகளின் இடங்கள், தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வை மாநில அரசே நடத்தும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com