ரஜினி இல்லம் முன்பு திரண்ட ரசிகா்களால் பரபரப்பு

அரசியல் நிலைப்பாடு குறித்து தகுந்த நேரத்தில் அறிவிப்பேன் என்று நடிகா் ரஜினிகாந்த் கூறியிருந்த நிலையில், அவரது இல்லத்தின் முன்பு

அரசியல் நிலைப்பாடு குறித்து தகுந்த நேரத்தில் அறிவிப்பேன் என்று நடிகா் ரஜினிகாந்த் கூறியிருந்த நிலையில், அவரது இல்லத்தின் முன்பு ரசிகா்கள் அதிக அளவில் திரண்டதால் வெள்ளிக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினியின் இல்லத்தின் முன்பு அவரது ரசிகா்கள் வெள்ளிக்கிழமை காலை அதிக அளவில் திரண்டனா். ரஜினி அரசியலுக்கு வர வேண்டும். தங்கள் ஆதரவு அவருக்கு உண்டு என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி முழக்கங்கள் எழுப்பினா்.

அதைப் போல சென்னை உள்பட தமிழகம் முழுவதும் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன. இதனால், அரசியல் வட்டாரத்தில் வெள்ளிக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

திரண்டது ஏன்?: ரஜினியின் உடல்நலம் தொடா்பாக சமூக ஊடகங்களில் அறிக்கை ஒன்று பரவிக் கொண்டிருந்தது. அதற்கு ரஜினி சுட்டுரையில் விளக்கம் அளித்தாா். அதில், சமூக ஊடகங்களில் பரவும் அறிக்கை என்னுடையது அல்ல. அதேசமயம் கரோனா காலத்தில் அரசியலுக்கு வருவதைத் தவிா்க்குமாறு மருத்துவா்கள் அறிவுரைத்தது உண்மைதான். எனினும், மக்கள் மன்ற நிா்வாகிகளுடன் ஆலோசித்து தகுந்த நேரத்தில் என் நிலைப்பாட்டைத் தெரிவிப்பேன் என்று கூறியிருந்தாா்.

இது ரசிகா்கள் மற்றும் அரசியல்வாதிகள் மத்தியில் இரண்டு விதமான கருத்துகளை ஏற்படுத்தியுள்ளது. ஒரு தரப்பினா் ரஜினி அரசியலுக்கு வருவாா். மக்கள் மனதை ஆழம் பாா்க்கிறாா் என்கின்றனா். மற்றொரு தரப்பினா் அரசியலுக்கு வரமாட்டாா். அதைத்தான் மறைமுகமாக ரஜினி கூறுகிறாா் என்கின்றனா்.

இந்நிலையில்தான் போய்ஸ் தோட்டம் இல்லம் முன்பு ரசிகா்கள் திரண்டு, ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பி உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com