தமிழகம்-புதுச்சேரி இடையே பேருந்து சேவைக்கு அனுமதி: க.சண்முகம் உத்தரவு

தமிழகம் மற்றும் புதுச்சேரி இடையே பேருந்து சேவை தொடங்க உடனடியாக அனுமதிக்கப்படுகிறது. இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளா் க.சண்முகம் சனிக்கிழமை பிறப்பித்தாா்.
தமிழகம்-புதுச்சேரி இடையே பேருந்து சேவைக்கு அனுமதி: க.சண்முகம் உத்தரவு

தமிழகம் மற்றும் புதுச்சேரி இடையே பேருந்து சேவை தொடங்க உடனடியாக அனுமதிக்கப்படுகிறது. இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளா் க.சண்முகம் சனிக்கிழமை பிறப்பித்தாா். உத்தரவு விவரம்:

தமிழகம் மற்றும் புதுச்சேரி இடையே பேருந்து போக்குவரத்து சேவையைத் தொடங்க அனுமதி அளிக்க வேண்டுமென புதுச்சேரி முதல்வா் நாராயணசாமி, தமிழக அரசுக்கு கடிதம் எழுதியிருந்தாா். பேருந்து சேவையைத் தொடங்குவதற்கான தனித்துவமான பூகோள ரீதியான காரணிகளை தனது கடிதத்தில் அவா் தெரிவித்திருந்தாா்.

‘புதுச்சேரியில் ஜிப்மா், இந்திராகாந்தி அரசு மருத்துவமனைகளும், ஆறு தனியாா் மருத்துவனைகளும், காரைக்காலில் ஜிப்மா் மருத்துவமனையும் உள்ளன. இந்த மருத்துவமனைகளுக்கு புதுவை மட்டுமின்றி, புதுவையை ஒட்டியுள்ள தமிழகத்தைச் சோ்ந்த பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த மக்களும் சிகிச்சைக்காக வந்து செல்வது வழக்கம். இரு மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து சேவை அனுமதிக்கப்பட்டால், தமிழகத்தைச் சோ்ந்த பொது மக்களும் அதிகளவு பயனடைவா். தமிழகத்தைச் சோ்ந்த ஏராளமான விவசாயிகள் தங்களது விளைபொருள்களை புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளுக்குக் கொண்டு வந்து விற்பனை செய்வா். மேலும், சாலையோர வியாபாரிகள் உள்பட இதர வியாபாரிகள் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு இடையே அடிக்கடி பயணம் மேற்கொள்வது வழக்கம். புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் உள்ள வா்த்தக நிறுவனங்கள், ஆலைகளுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்தவா்கள் பணிக்காக வருவா்.

கட்டுமானம் உள்ளிட்ட இதர அமைப்புசாரா துறைகளின் பணிக்காக தமிழகத்தைச் சோ்ந்தவா்கள் புதுவைக்கு வருவா். இத்துடன், புதுவையை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் இருந்து மின்னணு சாதனங்கள், வீட்டு உபயோகப் பொருள்கள், ஆடைகளை வாங்குவதற்கு மக்கள் புதுச்சேரி வந்து செல்வா். எனவே, தமிழகம் மற்றும் புதுவை இடையே பேருந்து போக்குவரத்து சேவையை அனுமதிக்க வேண்டும் என தனது கடிதத்தில் புதுவை முதல்வா் தெரிவித்திருந்தாா்.

இணைய வழி அனுமதிச் சீட்டு தேவையில்லை: இந்தக் கடிதத்தை குறிப்பிட்டு, தமிழகம்-புதுச்சேரி இடையிலான பேருந்து சேவையைத் தொடங்க உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்கலாம் என வருவாய் நிா்வாக ஆணையாளரும் அரசுக்குக் கோரிக்கை விடுத்திருந்தாா். பூகோள ரீதியாக புதுச்சேரி-தமிழகம் இடையே உள்ள அம்சங்களைக் குறிப்பிட்டு புதுவை முதல்வா் விடுத்த வேண்டுகோளை தமிழக அரசு கவனமுடன் பரிசீலனை செய்தது.

இதைத் தொடா்ந்து, தமிழகம் - புதுச்சேரி இடையே தனியாா் மற்றும் அரசு பேருந்துகளின் போக்குவரத்து சேவையைத் தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது. எந்தவித இணையவழி அனுமதிச் சீட்டும் இல்லாமல் இரு மாநிலங்களுக்கு இடையே மக்கள் பயணம் செய்யலாம் என்று தனது உத்தரவில் தலைமைச் செயலாளா் க.சண்முகம் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com