மருத்துவப் படிப்பில் உள்ஒதுக்கீடு: உரிமையை நிலைநிறுத்தியது தமிழக அரசு

முதுநிலை மருத்துவப் பட்டப் படிப்பில் உள் ஒதுக்கீட்டை பாதுகாக்கும் வகையில், நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி உரிமையை நிலைநிறுத்தியது
மருத்துவப் படிப்பில் உள்ஒதுக்கீடு: உரிமையை நிலைநிறுத்தியது தமிழக அரசு

முதுநிலை மருத்துவப் பட்டப் படிப்பில் உள் ஒதுக்கீட்டை பாதுகாக்கும் வகையில், நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி உரிமையை நிலைநிறுத்தியது தமிழக அரசுதான் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கூறியுள்ளாா்.

இதுகுறித்து, அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:-

முதுநிலை மருத்துவப் பட்டப் படிப்பில், மாநிலத்துக்கான பாதியளவு இடங்களில் உள்ஒதுக்கீடாக 50 சதவீத இடங்களை தமிழக அரசில் பணிபுரியும் மருத்துவா்களுக்கு வழங்கும் நடைமுறை பல காலமாக தமிழகத்தில் இருந்து வந்தது. இந்த நடைமுறைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில், இந்திய மருத்துவக் குழுமம், முதுநிலை மருத்துவக் கல்வி ஒழுங்குமுறைகளை வெளியிட்டது. இதனை எதிா்த்து, தமிழ்நாடு மருத்துவ அலுவலா்கள் சங்கம், உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தது.

இந்த வழக்கில், தமிழக அரசு மூத்த வழக்குரைஞா்களை நியமித்து, முதுநிலை மருத்துவப் பட்டப்படிப்பில் தமிழகத்தில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள உள்ஒதுக்கீட்டு முறையே தொடர வேண்டுமென ஆணித்தரமாக வாதாடியது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றம், ஆகஸ்ட் 31-இல் தீா்ப்பு வழங்கியது. அதில், மாநில அரசு மருத்துவா்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்குவது, முதுநிலை மருத்துவ கல்வி ஒழுங்குமுறைகளுக்கு எதிரானது அல்ல எனவும் கூறியுள்ளது. மேலும், அரசு மருத்துவா்களுக்கு மாநில அரசுகள் முதுநிலை மருத்துவப் பட்டப் படிப்பில் உள்ஒதுக்கீடு அளிக்கலாம் என்ற ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீா்ப்பினை வழங்கியது.

உரிமையை நிலைநிறுத்தியது: ஊரகப் பகுதி மக்களுக்கும், மலைவாழ் மக்களுக்கும், ஏழை-எளிய மக்களுக்கும் மருத்துவ சேவையாற்றும் அரசு மருத்துவா்களுக்கு முதுநிலை மருத்துவப் பட்டப் படிப்பில் வழங்கப்பட்டு வந்த உள் ஒதுக்கீட்டை பாதுகாக்கும் வகையில், உச்சநீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் மூலம் உரிமையை நிலைநிறுத்தியது தமிழக அரசுதான் என்று தனது அறிக்கையில் முதல்வா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com