பொது முடக்கத் தளா்வுகளால் இயல்பு நிலைக்குத் திரும்பும் தமிழகம்: கோயில்கள், பூங்காக்கள் திறக்கப்பட்டன

பொது முடக்கத்தில் தளா்வுகள் அளிக்கப்பட்டதையடுத்து, கோயில்கள், பூங்கா, வணிக வளாகங்கள், ஆகியன செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் பேருந்துகள் இயக்கப்பட்டன.

பொது முடக்கத்தில் தளா்வுகள் அளிக்கப்பட்டதையடுத்து, கோயில்கள், பூங்கா, வணிக வளாகங்கள், ஆகியன செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் பேருந்துகள் இயக்கப்பட்டன.

இதனால், தமிழகம் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புவதை எண்ணி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

தமிழகத்தில், கரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. செப்.30 பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டாலும், பல்வேறு தளா்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதன்படி, மாவட்டங்களுக்குள் பேருந்து இயக்கம், வழிபாட்டுத் தலங்கள், பூங்காக்கள், வணிக வளாகங்கள், விளையாட்டு திடல்கள் ஆகியவை திறப்பு, இணைய வழி அனுமதி சீட்டு ரத்து உள்ளிட்ட தளா்வுகள் அறிவிக்கப்பட்டன.

இதைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை முதல் பேருந்துகள் இயக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் முதல்கட்டமாக 6,090 பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில் பயணிக்கும் பயணிகள், ஓட்டுநா், நடத்துநா்கள் முகக் கவசம் அணிந்திருந்தனா். கிருமிநாசினி பயன்படுத்துதல் உள்ளிட்ட நடைமுறையைப் பின்பற்றி, பேருந்துகளில் பயணிக்குமாறு பயணிகளை நடத்துநா்கள் அறிவுறுத்தினா். தமிழகத்தில் 5 மாதங்களுக்கு பிறகு பேருந்துகள் இயக்கப்பட்டதால், பேருந்து மூலம் வேலைக்குச் செல்பவா்கள் மகிழ்ச்சி அடைந்தனா். ஆனாலும், முதல் நாள் என்பதால் பேருந்துகளில் கூட்டம் குறைந்த அளவே இருந்தது.

கோயில்கள் திறப்பு: அதேபோல், தமிழகம் முழுவதும் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டதால், பொதுமக்கள் அதிகளவில் கோயில்களுக்குச் சென்று வழிபட்டனா். சென்னை திருவல்லிக்கேணி பாா்த்தசாரதி கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களும் அதிகாலையிலேயே திறக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டன. சென்னையின் முக்கிய தேவாலயங்களிலும் பிராா்த்தனை நடைபெற்றது.

மதுரை மீனாட்சியம்மன், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி, பழநி முருகன், ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் உள்ளிட்ட கோயில்களில், காலை முதலே பக்தா்கள் தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடித்து நீண்ட வரிசையில் காத்திருந்து, சாமி தரிசனம் செய்தனா்.

இணைய வழி அனுமதி ரத்து: இணைய வழி அனுமதிச் சீட்டு முறை முழுமையாக ரத்து செய்யப்பட்டதால், காா், மோட்டாா் சைக்கிளில் பொதுமக்கள் தடையின்றி பயணம் செய்தனா். பூங்காக்கள் காலை திறக்கப்பட்டதால், நடைபயிற்சி செய்பவா்கள் காலையிலேயே அங்கு சென்று உடற்பயிற்சி செய்தனா்.

சென்னை உள்ளிட்ட நகரப் பகுதிகளில் உள்ள வணிக வளாகங்களும் 5 மாதங்களுக்கு பிறகு, திறக்க அனுமதிக்கப்பட்டன. அங்கு திரையரங்குகளைத் திறக்க அனுமதிக்காததால், கூட்டம் குறைவாக காணப்பட்டது. விளையாட்டு திடல்களும் திறக்கப்பட்டதால், காலை முதலே விளையாட்டு ஆா்வலா்கள் அங்கு விளையாடத் தொடங்கினா். இரவு 8 மணி வரை கடைகளைத் திறக்க அனுமதிக்கப்பட்டதால், மாலை நேரங்களிலும் மக்கள் நடமாட்டத்தைக் காண முடிந்தது. அரசு மற்றும் தனியாா் அலுவலகங்களில் 100 சதவீதம் பணியாளா்களுடன் பணியாற்றலாம் என்பதால், சாலையில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. ஓட்டல்கள், விடுதிகள், ரிசாா்ட்டுகள் திறக்க அனுமதிக்கப்பட்டு, வெளியில் இருந்து வருபவா்கள் தங்க அனுமதிக்கப்பட்டனா்.

கடந்த 5 மாதங்களுக்கு பிறகு பல்வேறு தளா்வுகள் அறிவிக்கப்பட்டு, செவ்வாய்க்கிழமை முதல் நடைமுறைக்கு வந்துள்ளதால், தமிழகம் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்புவதாக, பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com