ஊரடங்கு காலத்திலும் 52,489 காசநோயாளிகளுக்கு தொடர்ந்து சிகிச்சை: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

கரோனா பொதுமுடக்க காலத்திலும் தமிழகத்தில் 52,489 காசநோயாளிகளுக்கு  தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார். 
அமைச்சர் விஜயபாஸ்கர்
அமைச்சர் விஜயபாஸ்கர்

கரோனா பொதுமுடக்க காலத்திலும் தமிழகத்தில் 52,489 காசநோயாளிகளுக்கு  தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

ரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் அரசு  சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட வேளையில் காசநோயாளிகளுக்கு சிகிச்சை, மருந்து மாத்திரைகள், கண்காணிப்பு ஆகியவை எவ்வித சுணக்கமும் இல்லாமல் நடைபெற வேண்டும் என்று முதல்வரால் அறிவுறுத்தப்பட்டது.

தமிழ்நாட்டில் காசநோய்க்காக வெளி நோயாளிகளாக தொடர் சிகிச்சை பெற்றுவரும் நபர்களுக்கு காசநோய்க்கான மருந்து மாத்திரைகள் அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று வழங்கி தங்கு தடையின்றி சிகிச்சை அளிக்கப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை 50,038 காசநோயாளிகளுக்கும், 2,451 பன் மருந்து எதிர்ப்புக் காசநோயளிகளுக்கும் என மொத்தம் 52,489 காச நோயாளிகளுக்கு அவர்களின் சிகிச்சை காலம் முழுவதற்கும் தேவைப்படும் காசநோய் மருந்துகள் காசநோய் களப்பணியாளர்கள் மூலம் அவர்களின் இருப்பிடங்களுக்கே சென்று வழங்கப்பட்டுள்ளது.

மேலும், சிகிச்சை நெறிமுறைகளின்படி அவர்களது வீட்டிலேயே சளி மாதிரி எடுக்கப்பட்டும், தேவைப்படுபவர்களுக்கு நடமாடும் ஊடுகதிர் கருவிகளை அவர்களின் இருப்பிடங்களுக்கே அனுப்பி ஊடுகதிர் படம் எடுக்கப்பட்டு, தொலைபேசி வாயிலாக சிகிச்சைக்கான மருந்துகளை உரிய வகையில் உட்கொள்வது, பக்கவிளைவுகள், காசநோயின் தன்மை போன்றவைகள் குறித்து கேட்டறிந்து தொடர் கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

காசநோயாளிகள் சத்து நிறைந்த உணவுகள் சாப்பிட வேண்டும். அதற்காக தமிழகம் முழுவதும் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் மூலம் சத்து நிறைந்த உணவு தயாரிப்பதற்கான பொருட்கள் அரசால் வழங்கப்பட்டு சத்தான உணவு கிடைப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற மக்கள் நலன் காக்கும் பன்முக நடவடிக்கைகள் மூலம் காசநோயாளிகள் எவ்வித சிரமும் இன்றி ஊரடங்கு காலத்திலும் சிறப்பான சிகிச்சையை அளித்துவரும் அரசின் சரியான செயல்பாட்டினை பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com